Published : 16 Apr 2021 12:25 PM
Last Updated : 16 Apr 2021 12:25 PM

கிரிஜா வைத்தியநாதன் வழக்கு; நிபுணத்துவம் இல்லாதவர்களைத் தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கும் போக்கு: உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடத்திற்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணையில், நிபுணத்துவம் இல்லாதவர்களைத் தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கும் போக்கு உள்ளது என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடத்திற்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால், குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதில் கிரிஜா வைத்தியநாதன் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும், சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கையாண்டது தொடர்பாக சட்டப்படி தேவைப்படும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மனுவில், “தேசிய பசுமை தீர்ப்பாயச் சட்டத்தின் பிரிவு 5-ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படக்கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அனுபவம் உள்ளது என்பதால், இவரது நியமனம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது.

இந்த மனு கடந்த முறை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் முன்வைக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த அனுபவம் இல்லை என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் அப்பணிக்கு நியமிக்கப்பட சட்டப்படியான அடிப்படைத் தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்து, அவரது நியமன உத்தரவுக்குத் தடை விதித்தது.

மேலும், வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தரப்பில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் நிபுணர்களாக இல்லை என்பதற்காகத்தான் அதில் நிபுணத்துவம் உள்ளவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டன.

நிபுணத்துவம் உள்ளவர்கள் தீர்ப்பாயத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால், தீர்ப்பாயங்களில் போதிய நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது நடக்கிறது என அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “விதிகளின்படி, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 25 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 20 ஆண்டுகால நிர்வாக அனுபவத்தில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது”. என வாதிட்டார். மேலும், பெரும்பாலான அரசு நிறுவனங்களின் நிர்வாக கட்டுப்பாட்டை கவனிப்பது ஐஏஎஸ் அதிகாரிகள் தான் எனவும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வரும் திங்கட்கிழமை ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஏப்.19-ம் தேதிக்கு (திங்கட்கிழமை) வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x