Published : 16 Apr 2021 11:09 AM
Last Updated : 16 Apr 2021 11:09 AM
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தல வளாகங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, மே மாதம் 15-ம் தேதி வரை மூடப்படுவதாகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட குடவரை சிற்பங்கள், இயற்கை அழகுடன் கூடிய கடற்கரையைக் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைப் பொதுமக்கள் தவிர்த்திருந்தனர்.
மேலும், 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் சுற்றுலாத் தலங்கள் மூடபட்டன. பின்னர், தொற்று குறைவினால் அரசு அறிவித்த படிப்படியான தளர்வுகள் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி கலைச்சின்ன வளாகங்கள் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குத் திறக்கப்பட்டன. எனினும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய கலைச்சின்ன வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் வரும் மே மாதம் 15-ம் தேதி வரையில் மூடப்படுவதாக தொல்லியல் துறை நேற்று (ஏப்.15) இரவு அறிவித்தது.
இதன்பேரில், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச் சின்ன வளாகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை வளாகங்களுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதிகளின் கதவுகள் மூடப்பட்டன.
இதேபோல், சாளுவான்குப்பம், சதுரங்கப்பட்டினம், ஆலம்பர குப்பம், முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 43 பாரம்பரிய கலைச்சின்ன வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால், சுற்றுலாப் பயணிகளை நம்பி தின்பண்டங்கள் மற்றும் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்துள்ளதால், கடற்கரையோர சொகுசு விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் வெறிச்சோடியுள்ளதாக விடுதி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT