Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

உத்திரமேரூர் அருகே அழிவின் விளிம்பில் அரிய கல்செக்கு: தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா?

உத்திரமேரூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தில், மண்ணில் புதைந்த நிலையில் காணப்படும் பழமையான கல்செக்கு.

உத்திரமேரூர்

உத்திரமேரூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்செக்கு மண்ணில் புதைந்து அழியும் நிலையில் உள்ளது. இதைப் பாதுகாக்க தமிழக தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உத்திரமேரூர் நெல்வாய் கூட்டுசாலை அருகேயுள்ளது விண்ணமங்கலம் கிராமம். இங்கு உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் தலைமையில் களப் பணி நடைபெற்றது. அப்போது மண்மேட்டில், ஒரு முள்புதரில் புதைந்த நிலையில் கல்செக்கு இருந்தது தெரியவந்தது. அதில், மூன்று வரிகள் செதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறியதாவது: பழங்காலத்தில் எண்ணெய் வித்துகள் மக்கள் வாழ்வில் முக்கிய இடம் வகித்தன. சமையல் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, விளக்கு எரிக்கவும் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. எண்ணெய் ஆட்ட கல் செக்குகள் உருவாக்கப்பட்டன. பல ஊர்களுக்கும் சேர்த்து ஒரு கல்செக்கு இருந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் கிடைத்துள்ளது.

மன்னர் அல்லது செல்வந்தர், தனது குடும்பத்தாரின் நலன் வேண்டி கோயில்களுக்கு கல்செக்கு தானம் வழங்கியுள்ளனர். இவ்வாறு தானம் வழங்கும் செக்கில் எந்த ஆண்டு யார் தானமாக அளித்தனர் என்பதையும் குறிப்பிடுவர்.

விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள கல்வெட்டில், குரோதன வருஷத்தில் புக்கண்ணராயர் ஆட்சிக் காலத்தில் கலைவாணிகன் என்பவர், இந்த கல்செக்கை ஊருக்கு தானமாக அளித்த செய்தி இடம் பெற்றுள்ளது. இது சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்ததாகும். இன்றைக்கும் இந்தப் பகுதி செக்குமேடு என்று அழைக்கப்படுகிறது.

உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள ஒரே செக்கு கல்வெட்டு இதுதான். 1923-ல் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டாலும், இந்த அரிய, தொன்மைவாய்ந்த கல்செக்கு இருப்பது ஊர் மக்களுக்குத் தெரியவில்லை. தற்போது இது மண்மேட்டில், முள்புதரில் புதைந்து, மறையும் நிலையில் உள்ளது. இதன் சிறிய பகுதி மட்டுமே வெளியே தெரிகிறது. இயற்கைச் சீற்றங்களால் முழுமையாக புதைந்து காணமல்போகவும் வாய்ப்புள்ளது. வருங்கால தலைமுறையினருக்கு வரலாற்றைத் தெரிவிக்கும் இந்த அரிய பொக்கிஷத்தைப் பாதுகாக்க, தொல்லியத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x