Published : 15 Apr 2021 06:28 PM
Last Updated : 15 Apr 2021 06:28 PM

பதவிக் காலம் முடிந்தும் பல்கலைக்கழக வளாகத்தை காலி செய்யாத சூரப்பா: 2 மாதம் அவகாசம் தர அரசிடம் கோரிக்கை

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி முடிவடைந்தும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இல்லத்தில் இருந்து காலி செய்ய அரசு வழங்கிய 2 நாள் கூடுதல் அவகாசத்தை மேலும் 2 மாதம் நீட்டிக்க வேண்டுமென அரசுக்கு சூரப்பா கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பா 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே அவரது நியமனத்தில் சர்ச்சை எழுந்தது. தமிழகத்தில் பலர் இருக்கையில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமிப்பதா என்கிற கேள்வி எழுந்தது. பதவிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து சூரப்பா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் மாநில அரசுக்கும் அவருக்குமான மோதல் எழுந்தது.

மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து பெறுவதில் ஆர்வம், இட ஒதுக்கீடு மறுப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு நிலைப்பாடுகளில் அரசுக்கும் சூரப்பாவுக்கும் மோதல் எழுந்தது. அவர் பதவிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது. அதன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் சூரப்பாவின் பதவிக் காலம் ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பதவிக் காலம் முடியும்வரை தனக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் எனக் காத்திருந்த சூரப்பா, அதுவரை எந்த உத்தரவும் வராததால் வீட்டை காலி செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் கோரினார். அரசு அதற்கு அனுமதி அளித்தது. அரசு அளித்த அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், தற்போது மேலும் 2 மாதம் அவகாசம் வேண்டும் என அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.

தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அடையாற்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் சூரப்பா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x