Published : 15 Apr 2021 04:36 PM
Last Updated : 15 Apr 2021 04:36 PM

நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறியதால் கண்டனம்: சேற்றில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி தார்ப்பாயை பிடித்துக் கொண்டு சேற்றில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை 

மழையில் நனையும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் நிர்வாகத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சேற்றில் உருண்டு விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவர் பேரவை சார்பில் இன்று (ஏப்.15) நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, "திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு வட்டங்களில் நவரை சாகுபடி அறுவடை நடைபெறுகிறது. 80 ஆயிரம் மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நேரடி நெல் கொள்முதல் நிலையம், தனியார் கமிட்டிகளில் விவசாயிகள் விற்பனை செய்யக் கொண்டு செல்கின்றனர்.

செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தினமும் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. வரத்து அதிகம் இருப்பதால், 30 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் குவிந்து கிடக்கின்றன.

எனவே, எடைப் பணியாளர் மற்றும் எடை போடுவதற்கான உபகரணங்களை வெளியூர்களில் இருந்து வரவழைத்து, எடை போடும் பணியை அதிகரிக்க வேண்டும். மேலும், வெளியூர் வியாபாரிகளை அனுமதித்து, நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதையும் அதிகரிக்க வேண்டும். 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் என்பதை, 30 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 200 நெல் மூட்டைகள் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை 600 மூட்டைகளாக அதிகரிக்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு நெல் மூட்டைகளைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் வழங்க வேண்டும். செய்யாறு மற்றும் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கட்டப்பட்டுள்ள தலா ஆயிரம் டன் கொள்ளளவு உள்ள 2 கிடங்குகளை உடனடியாகத் திறக்க வேண்டும்" என்று புருஷோத்தமன் தெரிவித்தார்.

பின்னர் அவர்கள், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தார்ப்பாயை உயர்த்திப் பிடித்துக் கொண்டும், தேங்கி இருந்த மழை நீரில் உருண்டு புரண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x