Last Updated : 15 Apr, 2021 03:51 PM

 

Published : 15 Apr 2021 03:51 PM
Last Updated : 15 Apr 2021 03:51 PM

கெயில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிர்ப்பு: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கெயில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

விவசாய நிலங்கள் வழியாக கெயில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெயில் எரிவாயுக் குழாயை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதைக் கண்டித்து, கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம் மற்றும் பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்க் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஏப்.15) காலை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

பின்னர், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் விவசாயிகள் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

"கெயில் நிறுவனம் கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக, எரிவாயுக் குழாய் திட்டத்தை விவசாயிகளின் நிலங்கள் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு 2011-ம் ஆண்டு முதல் கடும் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 'திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகத்தான் திட்டம்' என்ற கோட்பாட்டை அறிவித்து, அதன் அடிப்படையில், கெயில் எரிவாயுக்குழாய் திட்டம் சாலையோரம் மட்டுமே நிறைவேற்றப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால், தற்போது கெயில் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பாதிக்கப்பட்ட விவசாயிகளை மிரட்டி, அச்சுறுத்தி திட்டப் பணிகளைச் செய்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட கொள்கை முடிவு அமலில் இருந்து வருகிறது.

இத்திட்டம் கேரள மாநிலத்திலும், கர்நாடக மாநிலத்திலும் சாலையோரம் மட்டுமே அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி, கெயில் நிறுவனம் சாலையோரம் எரிவாயு குழாய் அமைப்பதை விவசாயிகளான நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

எனவே, தாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் கெயில் எரிவாயுக் குழாய் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். தற்போது, பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவுக்குப் புதிதாக 4 வழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு நிலம் எடுப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

எனவே, இந்தச் சாலையின் ஓரத்தில் கெயில் எரிவாயுக் குழாய் மற்றும் பாரத் பெட்ரோலிய எண்ணெய்க் குழாய் திட்டத்தையும் அமைக்க வேண்டும்".

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்ற ஆட்சியர், "வருகிற மே 2-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அதன்பிறகு ஒரு கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பாக முடிவெடுக்கலாம். அதுவரை குழாய் பதிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதனால் காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏடிஎஸ்பி ராஜி தலைமையில் டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பாஸ்கர், கணேஷ்குமார் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x