Published : 15 Apr 2021 02:38 PM
Last Updated : 15 Apr 2021 02:38 PM
புதுச்சேரியில் பராமரிப்பு இல்லாத நிலையில் பாரதிதாசன் சிலை வளாகம் இருப்பதாக வந்த மனுவைத் தொடர்ந்து நேரடியாக ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உடனடியாகச் சீரமைக்க உத்தரவிட்டார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அருகேயுள்ள 'புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் சிலை வளாகம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், அதை முறையாகப் பராமரிக்கவும் வலியுறுத்தி பாரதிதாசன் அறக்கட்டளை தரப்பில் ஆளுநர் தமிழிசையிடம் மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை, அதிகாரிகளுடன் ஆளுநர் மாளிகையில் இருந்து நடந்து சென்று பாரதிதாசன் சிலை வளாகத்தை இன்று (ஏப். 15) திடீரென ஆய்வு செய்தார். அங்கு கற்பலகைகள் உடைந்தும், வளாகம் தூய்மையின்றி, பராமரிப்பின்றி இருப்பதையும் ஆளுநர் தமிழசை கண்டார். ஆளுநரின் திடீர் ஆய்வைத் தொடர்ந்து அந்த வளாகத்தை அவசர அவசரமாகத் தூய்மைப்படுத்தும் பணியும் நடந்தது.
அதைப் பார்த்த ஆளுநர் தமிழிசை, அங்கு சிதிலமடைந்த கற்பலகைகளை மாற்றவும் முறையாக இவ்வளாகத்தை தூய்மைப்படுத்திச் செடிகளை நடவும் பொதுப்பணித் துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது ஆளுநர் தமிழசை கூறுகையில், "புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவர் பாரதிதாசன் என்பதை நினைவில் நிறுத்துவது அவசியம். அவர் சிலை இருக்கும் பகுதியைச் சரியாகச் சீரமைத்துப் பராமரிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT