Published : 15 Apr 2021 01:42 PM
Last Updated : 15 Apr 2021 01:42 PM
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதாகவும், இது முதல்வருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இருந்து மக்கள் விரைவில் விடுபட வேண்டும் என்று சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டேன். தமிழகத்தில் தொடர்ந்து, அமைதியான நல்லாட்சி நடைபெற வேண்டும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்று இல்லை. தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
பெருவாரியான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது என்பது வரவேற்புக்குரிய ஒன்று. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் முறையான நடவடிக்கை எடுத்திருக்கிறார். எல்லா மக்களுக்கும் கரோனா தொற்றுப் பரவல் குறித்து முறையாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், 'தனித்திருக்க வேண்டும் விழித்திருக்க வேண்டும்' என்பதுதான் முதல்வரின் வேண்டுகோள்.
இதை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இது முதல்வருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றே சொல்ல வேண்டும்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT