Published : 15 Apr 2021 01:06 PM
Last Updated : 15 Apr 2021 01:06 PM
கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 8,506 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் கடலூர், சிதம்பரம், புவனகிரி, விருத்தாச்சலம், திட்டக்குடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள நகரப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கடைவீதி, மார்க்கெட் பகுதிகளுக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும், பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முகக்கவசத்துடன் தனிமனித இடைவெளியுடன் பயணிகள் பயணிக்க வேண்டும், சினிமா திரையரங்குகளில் 50 சதவீதப் பொதுமக்கள் முகக்கவசத்துடன் தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு கிருமிநாசினி தரப்பட வேண்டும், திரையரங்குகளில் வேலை செய்யும் பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், திருமண மண்டபம், வணிக நிறுவனங்கள், பெரிய மால் உள்ளிட்டவற்றில் 50 சதவீதப் பொதுமக்களைத் தனிமனித இடைவெளியுடன் முகக்கவசத்துடன் அனுமதிக்க வேண்டும், பொதுமக்கள் கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்டத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன.
காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு திருமண மண்டபங்கள், மால், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி முதல் இன்று (ஏப். 15) வரை முகக்கவசம் அணியாத 8,506 பேருக்கும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத149 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.15 லட்சத்து 98 ஆயிரத்து 400 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT