Published : 15 Apr 2021 12:57 PM
Last Updated : 15 Apr 2021 12:57 PM
''பொதுமக்கள் இந்த நேரத்தில் எண்ணிக்கையைப் பார்த்து பதற்றமடைந்து, அதே நேரத்தில் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது. ஒருவருக்கு வந்தால் 10 பேருக்கு வந்துவிடுகிறது. அந்தச் சங்கிலியை உடைக்க வேண்டும்'' என சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“நோய்த்தொற்று அதிகமாகும் நிலையில், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர் என்கிற முறையில் நடிகர் விவேக், அரசுக்கு உதவும் வகையில் பல பிரச்சாரங்களைச் செய்து கொடுத்துள்ளார். இம்முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பொதுமக்களைத் தடுப்பூசி போட வலியுறுத்தியதற்காக அவருக்குத் தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா நோய் குறித்து நேற்றிலிருந்து தடுப்பூசி திருவிழா தொடங்கியது. நேற்றைய தொற்று இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 58,952 பேருக்கும், உ.பி.யில் 20,439 பேருக்கும், டெல்லியில் உள்ள ஒரு நகரத்தில் மட்டும் 17,882 பேருக்கும், சத்தீஸ்கரில் 14,850 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளா போன்ற பல மாநிலங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் 7,919 என்கிற எண்ணிக்கையில் தொற்று உள்ளது.
இந்த நேரத்தில் நாம் பதற்றப்படக் கூடாது. இந்த நேரத்திலும் குறிப்பிட வேண்டியது இறப்பு விகிதம் 1.35% என்று மிகவும் குறைந்துள்ளது. முதலில் நாம் இந்த நேரத்தில் செய்யவேண்டியது 45 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். நமக்குத் தொற்று வராது, கூட்டத்தில் முகக்கவசம் இல்லாமல் சென்றாலும் எனக்கு கரோனா வராது என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
சங்கிலி என்பார்கள், நம் கண்ணுக்குத் தெரியாமல் பரவும் கிருமி அது. அதை உடைக்க வேண்டும் என்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் மூலமாகத்தான் உடைக்க முடியும். பதற்றப்பட வேண்டாம். நமக்கு அருமையான மருத்துவ முறை உள்ளது. சென்னை, கோவை போன்ற இடங்களில் பொதுமக்கள் அவர்களாகத் தேர்வு செய்யும் மருத்துவமனைக்குச் செல்வதால் அதற்கு வழிகாட்ட டிஎம்எஸ், டிடிஎச்சில் கட்டுப்பாட்டறை அமைத்துள்ளோம்.
பொதுமக்கள் இந்த நேரத்தில் எண்ணிக்கையைப் பார்த்துப் பதற்றமடைந்து அதே நேரத்தில் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது. ஒருவருக்கு வந்தால் 10 பேருக்கு வந்துவிடுகிறது. அந்தச் சங்கிலியை உடைக்க வேண்டும். நேற்று 75,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இன்று 1 லட்சம் பேர் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுடைய ரிப்போர்ட் 2 லட்சம் பேர் ஒரு நாளைக்குப் போடவேண்டும் என்பதே.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல வயது வரம்பின்றி அனைவருக்கும் தடுப்பூசி போடத் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியுள்ளோம். அதற்கு என்று ஒரு கமிட்டி உள்ளது. அதிலும் கோரியுள்ளோம்.
மழைக்காலம் காரணமாக சூடான உணவுகளை மட்டும் உண்ண வேண்டும். கரோனா மட்டுமல்ல 3 மாதத்திற்குரிய மருந்துகளைத் தயாராக வைத்துள்ளோம். மக்கள் மருந்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஆனால், ஒத்துழைப்பு தேவை. கூட்டமாக அனைவரும் ஒன்று சேரக் கூடாது. மார்க்கெட், கடைத்தெரு என கும்பலாக ஒன்றுகூடக் கூடாது”.
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT