Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM
முக்கொம்பில் புதிய மேலணை கட்டும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணிகள் நிறைவடைந்து ஜூலையில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி இரவு முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தன. இதனால், விநாடிக்கு 2.25 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் மேலணை வழியாக வெளியேறியது.
இதையடுத்து, முதல் கட்டமாக பெரிய பாறைகள் மற்றும் லட்சக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பு வழியாக தண்ணீர் வெளியேறுவது கட்டுப்படுத்தப்பட்டது.
அதன்பின், முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் மேலணைக்குப் பதிலாக ரூ.387.60 கோடியில் புதிய மேலணையும், மேலணையில் உடைந்த பகுதியில் ரூ.38.85 கோடியில் தற்காலிக தடுப்பணையும் கட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தொடர்ந்து, புதிய மேலணை கட்டுவதற்காக 2018, டிச.6-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கின. அப்போது, இப்பணிகள் 2021 மார்ச் மாதம் நிறைவடையும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதேபோல, 2019 பிப்.28-ம் தேதி தொடங்கிய தற்காலிக தடுப்பணை கட்டும் பணி 2020 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.
புதிய மேலணை கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, மாநில அமைச்சர்கள், அரசு செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டைசெல்வன், பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் ஆர்.பாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளைத் துரிதப்படுத்தினர்.
இதன் காரணமாக முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய மேலணை கட்டும் பணிகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியது:
கொள்ளிடம் பழைய மேலணை உடைந்துவிட்டதால் ஏற்கெனவே இருந்த ஸ்திரத்தன்மை இருக்காது. இதைக் கருத்தில் கொண்டுதான் அரை வட்ட வடிவிலான காப்பணையுடன், பழைய மேலணையின் முழு நீளத்துக்கும் கூடுதல் கசிவு இல்லா சுவர், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
இதனிடையே, புதிய மேலணை அமைக்கும் பணியும் நவீன தொழில்நுட்ப ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே முதல் முறையாக கொள்ளிடம் புதிய மேலணையில் தெற்குப் பகுதியில் 45, வடக்குப் பகுதியில் 10 என மொத்தம் 55 ஹைட்ராலிக் வெர்டிக்கல் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பைல் பவுன்டேஷன் தொழில்நுட்ப முறையில் 60 அடி ஆழத்தில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6 அடி ஆழத்துக்கு பாறையை குடைந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரும்பு, கம்பிகள் ஆகியவை துருப்பிடிக்காத வகையில் epoxy coating பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய மேலணை கட்டும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
3 முறை வெள்ளப் பெருக்கு, கரோனா ஊரடங்கு ஆகிய தடைகளுக்கு மத்தியில் இந்தளவுக்கு பணிகள் நிறைவடைய அனைத்துத் தரப்பினரும் இரவு- பகல் பாராது முழு ஒத்துழைப்பு அளித்ததே காரணம்.
புதிய மேலணை கட்டும் பணி ஜூலை மாதம் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
இதேபோல, முக்கொம்பு நடுக்கரையில் இருந்து மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை 7 கிமீ தொலைவுக்கு ரூ.20 கோடியில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT