Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM
தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து ஓராண்டுக்குமேலாகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. மேலும், பாலத்தின் மற்றொரு பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கேபெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அடிக்கடி சேதமாகும் பாலம்
ஆனால், இந்த பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே சேதமடைந்தது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய ஓட்டைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு மார்க்கங்களில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) வழியாக திருப்பி விடப்பட்டன.
பாலம் சேதமடைந்து ஓராண்டுக்கு மேலாகி, இன்னும் சீரமைக்கப்படாததால் வாகனங்கள் அனைத்தும் தற்போது வரை ஒருவழிப் பாதை வழியாகவே சென்று வருகின்றன. சேதமடைந்த பாலம் பகுதியை மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ஆய்வு செய்தனர். பாலத்தின் தரம் குறித்து நவீன கருவிகள் மூலம் அவர்கள் விரிவாக ஆய்வு நடத்தினர். ஆய்வுப் பணிகள் முடிவடைந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட போதிலும், பாலம் சீரமைப்பு பணி தொடங்கவில்லை.
மீண்டும் சேதம்
இந்நிலையில், வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மீண்டும் சேதம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் உடனடியாக ஆய்வு நடத்தினர். மாவட்ட ஆட்சியரும் நேரில் பார்வையிட்டார். சேதமடைந்த பகுதியில் உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. சீரமைக்கப்பட்ட அந்த பகுதி முழுமையாக உலராததால், கடந்த ஒரு வாரமாக சாலை தடுப்பு கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இருமார்க்க வாகனங்களும் ஒருவழிப்பாதையில் செல்லும் நிலையில், அந்த பகுதியில் மீண்டும் சேதம் ஏற்பட்டு, சாலை தடுப்பு போட்டு மறைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வல்லநாடு ஆற்றுப்பாலத்தை கடக்க வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த பாலத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் சீரமைப்பு: திட்ட இயக்குநர்
இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் பி.சங்கர் கூறும்போது, வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட லேசான சேதம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு இன்று அல்லது நாளை அகற்றப்பட்டு அந்த வழியாக வாகன போக்குவரத்து முழுமையாக நடைபெறும்.
இதேநேரத்தில், தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தட பகுதியில் ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அளித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் பாலத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை. பாலத்தின் தரத்திலும் பாதிப்பு இல்லை. பாலம் வலுவானதாகவே உள்ளது. பாலத்தில் ஏற்பட்ட சேதங்களை மட்டும் சீரமைத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, வல்லநாடு பாலம் குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் இன்னும் 10 அல்லது 15 நாட்களில் தொடங்கும். சேதங்கள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்பட்டு இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் வல்லநாடு ஆற்று பாலத்தில் வாகன போக்குவரத்து வழக்கம் போல் முழுமையாக நடைபெறும். எனவே, யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT