Published : 14 Apr 2021 09:03 PM
Last Updated : 14 Apr 2021 09:03 PM
மதுரையில் சித்திரைத் திருவிழா ரத்தானதால் திருவிழா நாட்களில் ஒரு நாளைக்கு நடக்கும் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவிழா என்றாலே கொண்டாட்டமும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடும். அதுவும் தமிழர்களின் வரலாறும், கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தலைநகரமான மதுரையில் ஆண்டு முழுவதுமே திருவிழாக்கள் களைகட்டும். அதனால், மதுரைக்கு திருவிழாக்களின் நகரம் என்ற அடையாளமும் உண்டு.
ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்தாலும் அதில் மிகுந்த விஷேசமான திருவிழாவாக சித்திரைத் திருவிழா பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேம், சித்திரைத் தேரோட்டம், அதன் தொடர்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகளில் தென் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.
இந்தத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்கள், கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்தளவுக்கு திருவிழாக்கள், மதுரை மக்களின் வாழ்வியலோடு பின்னிபிணைந்திருக்கிறது.
இந்த சித்திரைத்திருவிழா நாளில், மதுரையில் சாதாரண தள்ளுவண்டி முதல் ஹோட்டல்கள், கார்பரேட் ஜவுளி நிறுவனங்கள் வரை அனைத்து வகை வியாபாரத்திலும் பல நூறு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும்.
சென்னை, கோவை, ஓசூர், திருச்சி போன்ற பெரிய தொழிற்பேட்டைகள் இல்லாததால் திருவிழாக்களை அடிப்படையாக கொண்டே மதுரையின் ஒட்டமொத்த வர்த்தகமும் அமைந்துள்ளது.
ஆனால், கரோனாவால் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளால் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாகவே மதுரையில் முன்போல் திருவிழாக்கள் நடக்கவில்லை.
கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ரத்தானதால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், சிறுதொழில்கள், சிறு, குறுவியாபாரிகள் நலிவடைந்தன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
இந்நிலையில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஒரளவு கரோனா கட்டுக்குள் வந்ததால் திருவிழா வழக்கம்போல் உற்சாகமாக நடக்கும் என்றும், அதன் மூலம் வியாபாரமும், தொழில்களும் முன்போல் எழுச்சிப்பெறும் என்று அனைத்து வியாபாரிகளும் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா ரத்து செய்து, அனைத்து வகை நிகழ்வுகளும் உள்விழாவாக கோயில் வளாகத்தில் நடக்கும் என்றும், பக்தர்கள் பங்கேற்க தடையும் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதனால், இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தினமும் இந்த சித்திரை திருவிழாவால் வாழ்வாதாரம் பெற்று வந்த சிறு, குறு வியாபாரிகள், நாட்டுப்புற கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டும், போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். திருவிழா நடந்தால் மக்கள் புத்தாடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், பூஜை பொருட்கள், நேர்த்திக்கடன் பொருட்கள், பூக்கள் உள்ளிட்ட பல்வகை பொருட்கள் வாங்குவார்கள். திருவிழா நாட்களில் மதுரையில் குவியும் மக்கள், தள்ளுவண்டி கடைகள், ஹோட்டல்கள், பலகார கடைகளில் சாப்பிடுவார்கள். அதன் மூலம் உணவுப்பொருள் வியாபாரமும் களைகட்டும். தற்போது சித்திரைத்திருவிழா ரத்தானதால் திருவிழா களைகட்ட வேண்டிய இந்த நேரத்தில் பொதுஊரடங்கு அறிவித்ததுபோல் மதுரை வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷம் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு கரோனாவில் இருந்து மீண்டு 50 சதவீதம் வியாபாரிகள் தற்போதுதான் பழைய நிலைக்கு வந்தனர். 25 சதவீதம் வியாபராரிகள் வர முடியாமல் தவிக்கின்றனர். மீதி 25 சதவீதம் வியாபாரிகள் காணாமல் போய்விட்டனர். முன்போல் பொதுஊரடங்கு அறிவித்தால் மீதமுள்ள வியாபாரிகளும் காணாமல் போகலாம்.
சித்திரைத்திருவிழா நடந்தால் திருவிழா நாட்களில் சாதாரண தள்ளுவண்டி வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தினமும் ரூ.200 கோடி வரை வர்த்தகம் நடக்கும். தற்போது அதுபோன்ற வர்த்தக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால், மக்கள் உடல்ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அரசு அறிவித்த இந்த கட்டுப்பாடுகளை வரவேற்கிறோம்.
ஆனால், இந்த கட்டுப்பாடுகளை தேர்தல் வரை காத்திருந்து தற்போது அறிவித்தது வருத்தம் அளிக்கிறது. தேர்தலில் கட்டுப்பாடில்லாமல் குவிந்த கூட்டதாலேயே தற்போதைய கரோனா பரவலுக்கு காரணம். அமெரிக்காவில் நடக்கும் தேர்தல்களில் நமது நாட்டைபோல் கூட்டமாக சென்று யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே சென்று ஆதரவு திரட்டுவார்கள். அதுபோன்ற பிரச்சார திட்டத்தை இந்த கரோனா காலத்தை வைத்தாவது தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியிருக்கலாம், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT