Last Updated : 14 Apr, 2021 07:42 PM

 

Published : 14 Apr 2021 07:42 PM
Last Updated : 14 Apr 2021 07:42 PM

கோவை குற்றாலத்தில் வார நாட்களில் 750 பேருக்கு மட்டுமே அனுமதி: கரோனா பரவல் காரணமாக வனத்துறை அறிவிப்பு

கோவை

கோவை குற்றாலத்தில் இனிமேல் வாரநாட்களில் 750 சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் இன்று சித்திரை முதல்நாளை முன்னிட்டு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

ஆனால், கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால், பலர் திரும்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: இனிமேல் விடுமுறை நாட்களில் கோவை குற்றாலத்தில் 1,000 பேர் அனுமதிக்கப்படுவர். மற்ற வார நாட்களில் தினமும் 750 பேர் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு வருபவர்களை 5 குழுக்களாக தினமும் உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளோம். காலை 9 மணி முதல் 10 மணி வரை 150 பேர், அதேபோல காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணிவரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இதே விடுமுறை நாட்களில் ஒரு பேட்ச்சுக்கு 200 பேர் அனுமதிக்கப்படுவார்கள். கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக்கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.

சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் இல்லாமல் வருபவர்கள் முககவசத்தை வாங்கி அணிந்து கொண்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு, அங்கேயும் ஒவ்வொரு பயணிக்கும் வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். பின்பு சானிடைசரைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டு வாகனத்தில் ஏற வேண்டும். இந்த விதிகளை கடைப்பிடித்து சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பரளிக்காட்டில் 120 பேர்

கோவை மேற்குதொடர்ச்சி மலையில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ள பரளிக்காட்டுக்கு சூழல் சுற்றுலா வர சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தலா 120 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பரளிக்காடு பரளிக்காடு செல்ல விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த மார்ச் 13-ம் தேதி மீண்டும் தொடங்கிய சூழல் சுற்றுலாவுக்கு இதுவரை 1,000 பேர் வருகை புரிந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x