Published : 14 Apr 2021 01:19 PM
Last Updated : 14 Apr 2021 01:19 PM

முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேருக்கு ரூ.5.07 கோடி அபராதம்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை

முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேருக்கு ரூ.5.07 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து குறைந்து வந்த கரோனா தொற்று, மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க முதல் கட்டமாகப் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் சுகாதாரத் துறை சார்பில், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் படி அபராதம் விதிக்கப்படுகிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல பொது இடங்களில் எச்சில் துப்புவர்களிடம் 500 ரூபாயும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்களிடம் இருந்து 500 ரூபாயும் அபராதமாகப் பெறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ''தமிழகத்தில் முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து ரூ.5.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ரூ.9.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொற்றைக் குறைக்க முக்கியமான சில அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கைகளை அதிகரித்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுசெல்ல வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் முகக்கவசத்தின் அவசியம் குறித்துப் பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், ''பிப்ரவரி மாதம் வரை கட்டுக்குள் இருந்த கரோனா, இப்போது சவாலாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் பெரும்பாலான மக்கள் அறவே முகக்கவசம் அணியாமல் செல்வதுதான். பொது இடங்களுக்கு வந்தாலே முகக்கவசம் அணியவேண்டும்; கூட்டம் கூடினால் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும்.

முகக்கவசம் அணியாததற்காக அபராதம் தொடர்ந்து வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், ஏமாற்றுகிறார்கள். அப்படிச் செய்து தங்களைத் தாங்களே மக்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மக்களிடம் மனமாற்றம் தேவை'' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x