Published : 14 Apr 2021 10:59 AM
Last Updated : 14 Apr 2021 10:59 AM
சென்னையில் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிக்கப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை, தியாகராயநகரில் இன்று (ஏப். 14) சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"வாசனை தெரியாதது, வயிற்றுப்போக்கு, அதிக சோர்வு ஆகிய அறிகுறிகள் இப்போது கரோனா தொற்றுக்குத் தென்படுகின்றன. இந்த மாதிரியான அறிகுறிகள் யாருக்கு இருக்கின்றன என்பதை காய்ச்சல் கண்டறியும் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பதிவுசெய்து வருகின்றனர்.
எந்த அறிகுறிகளும் வெளியே தெரியாமல் கரோனா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆக்ஸிமீட்டரில் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு 95-க்கும் கீழ் குறைந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
இம்மாதிரி அறிகுறிகள் உள்ளவர்களை உடனே அருகில் நடைபெறும் காய்ச்சல் முகாம்களுக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்கிறோம். கரோனா தொற்று இருந்தால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
தன்னார்வலர்கள் கணக்கெடுப்புக்கு வரும்போது கூச்சம் இல்லாமல் அவர்களை பணி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். காய்ச்சல் முகாம்களுக்கு பொதுமக்கள் தாங்களாகவே சென்றும் பரிசோதித்துக்கொள்ளலாம்.
இப்போது சென்னையில் 50 காய்ச்சல் முகாம்கள் உள்ளன. 2-3 நாட்களில் 400 ஆக அவை அதிகரிக்கப்படும். கடந்த முறை கையாண்ட நடைமுறையைத்தான் இந்தாண்டும் பின்பற்றுகிறோம்.
கோவிட் தொற்று உள்ளவர்கள் எல்லோரும் மருத்துவமனைகளுக்கு சென்றால் மருத்துவர்கள் குறிப்பிட்டு நோயாளிகளை பார்க்க முடியாது. எனவே, சென்னையில் 12 ஸ்கிரீனிங் சென்டர்கள் அமைக்கப்படும். தற்போது 3 ஸ்கிரீனிங் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT