Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM

கரோனா பரவல், சித்திரை திருவிழா ரத்தால் மீண்டும் களையிழந்த மல்லிகை விற்பனை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கிலோ ரூ.500-க்கு விற்றது

மாட்டுத்தாவணி சந்தையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள மதுரை மல்லிகை. படம்: ஜி.மூர்த்தி

மதுரை

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்க வியாபாரிகள் பெரிதாக ஆர்வம் காட்டாததால் மல்லிகை கிலோ ரூ.500-க்கு விற்றது.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டுக்கு 50 டன் முதல் 75 டன் மல்லிகைப் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் கரோனா காலத்தில் பூ உற்பத்தி குறைந்ததால் 2 டன் மல்லிகைப்பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.

தற்போது பூ உற்பத்தி அதிகரித் துள்ளதால் மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 10 டன் மல்லிகைப் பூ விற்பனைக்கு வந்தது. ஆனால் மதுரையில் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் பூக்கள் வாங்க ஆர்வம் காட்ட வில்லை.

கடந்த சில மாதங்களாக சாதாரண நாட்களிலேயே மல்லிகை கிலோ ரூ.700 முதல் ரூ.1000 வரையும், விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையும் விற்பனையானது. ஆனால், தமிழ்ப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிற போதிலும் மதுரை மல்லிகைப் பூ நேற்று கிலோ ரூ.500-க்கு மட்டுமே விற்பனை யானது.

இது குறித்து மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறிய தாவது:

சந்தைக்கு மல்லிகை வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் சந்தைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் கரோனா அச்சத்தால் இவர்கள் பூக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. கிலோ ரூ.500 என்பது நல்ல விலைதான். ஆனால் பண்டிகை நாட்களில் இன்னும் விலை கூடியிருக்க வேண்டும் என்றனர்.

ஆண்டிபட்டி

தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி, சின்னமனூர், கோட்டூர், பாலார்பட்டி, வேப்பம்பட்டி, துரை சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆண்டிபட்டி அருகே கன்னிய பிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, தெப்பம்பட்டி, கொத்தப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பூ விவ சாயம் அதிகளவில் நடக்கிறது.

இங்கு விளையும் பூக்கள் சீலையம்பட்டி, தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படும். தற்போது மல்லிகை விளைச்சல் வெகுவாக அதிகரித்துள்ளது. சித்திரை மாதம் வீரபாண்டி, வீரப்ப அய்யனார், மாவூற்று வேலப்பர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில் திருவிழாக்கள் நடைபெறும். மேலும் சிறு கோயில்களிலும் வழிபாடுகள் அதிகம் நடைபெறும். இதனால் ஏப்ரலில் பூக்களின் விலை அதிகரிக்கும்.

ஆனால் கரோனாவால் திரு விழாக்கள் ரத்து செய்யப்பட் டுள்ளன. இதனால் இதன் விலை பெரியளவில் உயரவில்லை.

சீலையம்பட்டி வியாபாரிகள் கூறுகையில், திருவிழாக் காலத்தில் மல்லிகை விலை அதிகரிக்கும். தற்போது கரோனா அலையால் திருவிழாக்கள் ரத்தானதால் இதன் விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம், கிலோ ரூ. 2 ஆயிரம் வரை விலை கிடைத்தது. தற்போது கிலோ ரூ.300 ஆகக் குறைந்துள்ளது. வரத்து அதிகரித்தால் மேலும் குறையும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x