Published : 13 Apr 2021 09:37 PM
Last Updated : 13 Apr 2021 09:37 PM
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, கோவையில் பூ வகைகள், பழங்கள் விற்பனை இன்று தீவிரமாக இருந்தது.
தமிழ் புத்தாண்டு தினம் நாளை (14-ம் தேதி ) கொண்டாடப்படுகிறது. தமிழக மக்கள் தமிழ் புத்தாண்டாக இதைக் கொண்டாடுவது போல், கேரள மக்கள் விஷூ பண்டிகை தினமாக நாளைய தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
புத்தாண்டு தினமான நாளை மக்கள் பல்வேறு வகையான பழங்களை வைத்து தங்களது கடவுளை வழிபடுவர்.
இதற்காக பூக்கள் மற்றும் பழங்கள் வாங்க மக்கள் குவிந்ததால், கோவையில் உள்ள பூ மார்க்கெட், பழ மார்க்கெட்களில் இன்று (13-ம் தேதி) பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தபடிவந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் இன்று காலை முதல் பொதுமக்கள் தொடர்ந்து வந்து தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கிச் சென்றனர். பூக்களின் விலையும் பண்டிகை தினம் என்பதால் அதிகளவில் இருந்தது.
கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் கூறும்போது,‘ வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், கடந்த சில வாரங்களாக பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.
ன்றைய நிலவரப்படி கோவை பூ மார்க்கெட்டுக்கு 25 டன்கள் வரை பூக்கள் விற்பனைக்கு வந்தன. மல்லிகைப் பூ கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், ஒரு கிலோ முல்லை பூ ரூ.600, ரோஜா ரூ.160 முதல் ரூ.200, ஹைபிரிட் ரோஜா ரூ.300, செவ்வந்தி கிலோ ரூ.240 முதல் ரூ.260 வரையும், செண்டுமல்லி கிலோ ரூ.40, துளசி கிலோ ரூ.50-க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.30, தாமரை பூ ஒன்று ரூ.10 என்ற விலைக்கும் விற்கப்பட்டது,’’ என்றனர்.
பழங்கள் விற்பனை தீவிரம்
அதேபோல் பழ வியாபாரிகள் சிலர் கூறும்போது,‘‘ மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு அதிகளவில் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. பண்டிகை தினத்தை முன்னிட்டு பழங்கள் விற்பனை இன்று வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது.
ஒரு கிலோ ஆப்பிள் ரூ.200-க்கும், ஆரஞ்ச் பழம் ரூ.120-க்கும், மாதுளை ரூ.220-க்கும், கொய்யாப்பழம் ரூ.80-க்கும், சாத்துக்குடி ரூ.100-க்கும், மாம்பழங்கள் ரூ.120 முதல் ரூ.160 வரைக்கும், திராட்சை ரூ.160-க்கும், வெள்ளரி பழம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT