Published : 13 Apr 2021 08:53 PM
Last Updated : 13 Apr 2021 08:53 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 கிராம ஊராட்சிகளை ஒன்றிணைந்து அங்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்த வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.
திருப்பத்தூரில் 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஜார் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்ற கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.
மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் நகரில் செயல்படும் காய்கறி சந்தைகளில் வியாபாரத்தில் ஈடுப்பட்டு வரும் 45 வயதுக்கு மேற்பட்ட 200 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் திருப்பத்தூர் ஏஜிஎஸ் மஹாலில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை தாங்கி தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார். இதில், சிறு வணிகர்கள், காய்கறி வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இதைதொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.
அதைதொடர்ந்து, ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட அசோக்நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்டம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும், தினசரி 5 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் பட்டியலை தயார் செய்து 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்துவது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல, வீடு, வீடாக சென்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,
ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 கிராம ஊராட்சிகளை ஒன்றிணைந்து அங்கு தடுப்பூசி போடும் முகாமை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், துப்புரவு ஆய்வாளர் விவேக், வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி, ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், வணிக சங்க நிர்வாகிகள் தேவராஜ், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT