Published : 13 Apr 2021 04:16 PM
Last Updated : 13 Apr 2021 04:16 PM

கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டும் அனுமதி; கோயில் மண்டபத்தில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

தமிழகத்தில் கோயிலுக்குள் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கும், கோயில் மண்டபங்களுக்குள் நடைபெறும் திருமணங்களில் 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியது. அப்போது அமல்படுத்தப்பட்ட பலகட்ட ஊரடங்கால் மெல்ல மெல்லத் தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பெரும்பாலான பொதுமக்கள் கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கம் முதல் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நேற்றைய (ஏப்.12) நிலவரப்படி தமிழகம் முழுவதும் 6,711 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,105 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 பேராக அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 46 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 8-ம் தேதி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, கடந்த 10-ம் தேதி முதல், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும், திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களில் 100 பேருக்கும், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள 50 பேருக்கும் மட்டுமே அனுமதி என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இன்று (ஏப். 13) அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் கோயிலுக்குள் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கும், கோயில் மண்டபங்களுக்குள் நடைபெறும் திருமணங்களில் 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்திற்குள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவேளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி திருமணங்களை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் நடைபெறும் பூஜைகளில் கோயில் நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x