Published : 13 Apr 2021 04:33 PM
Last Updated : 13 Apr 2021 04:33 PM
ஆரணி அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் தாயாரிடம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.4,12,500-க்கான காசோலையை கோட்டாட்சியர் பூங்கொடி இன்று வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசிப்பவர் மோகன். இவர் டிராக்டர் ஓட்டுநர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த இவரைத் தாக்கி, புனலப்பாடி கிராமத்தில் வசித்த சக்திவேல் உட்பட 3 பேர், ரூ.12 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனத்தைக் கடந்த 8-ம் தேதி பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் உட்பட 3 பேர் மீது ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது. இதற்கிடையில், இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றபோது, விபத்தில் சிக்கியதாகக் கூறி, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல், கடந்த 10-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
இந்த நிலையில், சக்திவேலை 3 பேர் அடித்துக் கொலை செய்துள்ளனர் எனக் கூறி, ஆரணி நகர காவல் நிலையத்தை சக்திவேல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள், நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் காவல்துறை ஆய்வாளர் மீது குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வந்த கூடுதல் எஸ்.பி. அசோக்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சக்திவேல் தாயார் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து புனலப்பாடி கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணன், பரசுராமன் ஆகியோரைக் கைது செய்தனர்.
மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.4,12,500-க்கான காசோலையை அலமேலுவிடம் கோட்டாட்சியர் பூங்கொடி இன்று வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT