Published : 13 Apr 2021 02:06 PM
Last Updated : 13 Apr 2021 02:06 PM
காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிமுக்கு நேற்று (ஏப்.12) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏ.எம்.எச்.நாஜிம் தமது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பு மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருந்தார். தேர்தல் பணிகள் முடிந்த நிலையில், அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஏ.எம்.எச்.நாஜிம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேட்பாளர்களுக்குப் பரவும் தொற்று
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோல ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேபோல காட்பாடி தொகுதி திமுக வேட்பாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான துரைமுருகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களில், அதிக அளவிலான மக்கள் கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் உட்படப் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT