Published : 28 Dec 2015 05:02 PM
Last Updated : 28 Dec 2015 05:02 PM
பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் கடைசி நேரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடை நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தென் மாவட்ட கிராமங் களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைகளை தயார் செய்து விளை யாட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் விளையாட்டுகளை மையப்படுத்தியே கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் தமிழர்களுடைய பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடம் மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா, மாட்டுவண்டி பந்தயம் என வெவ்வெறு பெயர்களில் நடக்கும் வீர விளையாட்டுகளை மையப்படுத்தி நடக்கும். பொங்கல் பண்டிகை நாளில் தடையின்றி நடந்துவந்த இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் திருவிழா நெருங்கிவிட்ட நிலையில் தற்போதுவரை ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படாததால் தென் மாவட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆர்வலர்கள், காளை வளர்போர் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்து வருகின்றன. சில கட்சிகள், அமைப்புகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு பிரபலமாக நடைபெறும் கிராமங்களிலும் போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. அதனால், பொங்கல் பண்டிகை நெருங்கும் கடைசி நேரத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்போ, சட்டமோ தற்போது பிறப்பித்தால் அதற்கு எதிராக பிராணிகள் நல அமைப்புகள் நீதிமன் றத்துக்கு செல்ல வாய்ப்புள் ளது. இதைத் தவிர்க்கவே ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிப்பு தள்ளிபோவதாகக் கூறப்படுகிறது. இந்த கடைசி நேர நம்பிக்கையில்தான் தென் மாவட்ட கிராமங்களில் காளை வளர்ப்போர் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து தயார் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வீர விளையாட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநில செயலர் ஒண்டிராஜ் நேற்று கூறியதாவது:
ஆரம்ப காலத்தில் பொங்கல் பண்டிகை நேரத்தில் ஒவ்வொரு தென் மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் 40 கிராமங்களிலாவது ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக் கும். சமீபகாலமாக அதிகாரிகள், போலீஸாரின் கெடுபிடியால் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்கும் கிராமங்கள் சுருங்கிவிட்டன.
தடை நீக்கப்பட்டால் இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனி யாபுரம், பாலமேடு உள்ளிட்ட 6 கிராமங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் பிள்ளமநாயக் கன்பட்டி, புகையிலைப்பட்டி, தவசிமடை, அய்யம்பட்டி, வெள் ளோடு, பழநி நெய்காரப்பட்டி, நொச்சியோடைப்பட்டி உள்ளிட்ட 15 கிராமங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, எம்.புதூர், பட்டமங்கலம், அரளிப்பாறை உள்ளிட்ட 15 கிராமங்களிலும், திருச்சி மாவட்டத்தில் சூரியூர், பாலகுறிச்சி ஆவாரங்காடு ஆகிய இரு கிராமங்களிலும், தேனியில் 2 கிராமங்களிலும், சேலம் மாவட் டத்தில் 2 கிராமங்களிலும், பெரம்பலூரில் ஒரு கிராமத்திலும், ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால், 20 ஜல்லிக்கட்டு நடந்தாலே ஆச்சரியம்தான் என்றார்.
பொங்கல் பண்டிகையை முடக்க சதி
இந்து இளைஞர் பேரவை அமைப்பாளர் எஸ்.பாரத்தசாரதி கூறுகையில், “ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும். இந்த விளையாட்டுகள் இந்து மத கோயில் திருவிழாக்களுடன் இணைந்த விளையாட்டுகளாகும். பொங்கல் பண்டிகை இல்லாமல் ஜல்லிக்கட்டை தனியாக நடத்தப்போவதில்லை. பொது நலன் வழக்குகள் மூலம் ஜல்லிக்கட்டு விளையாட்டையும், பொங்கல் பண்டிகையையும் முடக்கப் பார்க்கின்றனர். குறிப்பாக போகி பண்டிகை கொண்டாடும்போது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்றும், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது என்றும், விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக்கூடாது என்றும் பொதுநலன் வழக்கு பெயரில் இந்த திருவிழாக்களையும் தடை செய்ய பார்க்கின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுமையாக நீக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT