Published : 12 Apr 2021 07:30 PM
Last Updated : 12 Apr 2021 07:30 PM

மதுரை மாநகராட்சியில் 80 சதவீதம் சொத்துவரி வசூல்: கரோனா நெருக்கடியிலும் பொறுப்புடன் வரி செலுத்திய மக்கள்

மதுரை

மதுரை மாநகராட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த கரோனா நெருக்கடியிலும் 80 சதவீதம் சொத்து வரி வசூலாகியுள்ளது.

கரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் மதுரை மக்கள் தன்னார்வமாக வந்து சொத்து வரியை செலுத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் இணைப்பு வரி, பாதாளசாக்கடை இணைப்பு வரி, தொழில் வரி, மாத கடை வாடகை மற்றும் குத்தகை வரி உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ.201 கோடி வருவாய் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக இதில் சொத்து வரி மட்டும் ரூ.97.03 கோடி வரை கிடைக்கும். 100 வார்டுகளில் உள்ள 3 லட்சத்து 26 ஆயிரத்து 460 வீடு மற்றும் வணிக நிறுவன கட்டிடங்கள், 1,427 அரசு கட்டிடங்கள், 1617 வழக்குகள் உள்ள கட்டிடங்கள், 44,475 காலி வீட்டுமனைகளுக்கு மாநகராட்சி வரி நிர்ணயம் செய்துள்ளது.

இந்த கட்டிடங்களில் இருந்து கடந்த 2020-2021ம் ஆண்டு(ஏப்ரல்-மார்ச்) மாநகராட்சி ஆண்டிற்கு ரூ. 97.03 கோடி சொத்து வரி வசூல் செய்ய மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து இருந்தது.

கரோனா நெருக்கடியால் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக வியாபார நிறுவனங்கள், வருமானம் இல்லாமல் நஷ்மடைந்துள்ளன. பொதுமக்கள் வேலையிழப்பு, ஊதியம் குறைப்பு போன்றவற்றால் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த வாரம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால் கடந்த சில மாதமாக ஆளும்கட்சியினரை மீறி பொதுமக்களை கட்டாயப்படுத்தி மாநகராட்சியில் வரி வசூல் செய்ய முடியாதநிலை ஏற்பட்டத.

அதனால், 2020-2021ம் நிதியாண்டில் வரிவசூல் மிகப்பெரியளவில் குறையலாம் என மாநகராட்சி அதிகாரிகள் கவலையடைந்து இருந்தனர். ஆனால், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், ‘‘பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி வரிசெய்ய வேண்டாம், நோட்டீஸ் வழங்கி நெருக்கடி கொடுக்க வேண்டாம், விருப்பட்டு வரி செலுத்துகிறவர்களிடம் வரிவசூல் செய்யுங்கள், மற்றவர்களிடம் வரி கட்டாமல் இருந்ததால் அடுத்தடுத்த ஆண்டுகள் கூடுதல் பாராமாகிவிடும் என்று வரிவசூல் செலுத்த விழிப்புணர்வு செய்யுங்கள், ’’ என்று மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

அதன் அடிப்படையில் மாநகராட்சி வருவாய்துறை ஊழியர்கள், கடந்த 6 மாதமாக பல்வேறு குழுக்களாக அனைத்து வார்டுகளிலும் சென்று யாரையும் கட்டாயப்படுத்தாமல் வரிவசூலில் இறங்கினார்.

பொதுமக்களிடம் கரோனாவால் பொருளாதாரத்தில் நலிவடைந்திருந்தாலும் ஒரளவு வரி செலுத்த தொடங்கினர். கடந்த 5 மாதமாக கரோனா கட்டுக்குள் இருந்ததால் மக்களுக்கு முன்போல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதால் வரிவசூல் அதிகமானது. அதனால், நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி 97.03 கோடியில் தற்போது வரை 76.96 லட்சம் வரிவசூலாகியுள்ளது. இது சொத்து வரிவசூலில் 79.32 சதவீதத்தை மதுரை மாநகராட்சி எட்டியுள்ளது. தொடர்ந்து வரிவசூல் தீவிரமாக நடக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வீடு, வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி ஒரளவு வசூலாகிவிட்டது. ஆனால், மாநகராட்சியில் உள்ள காலிமனைகளுக்கான சொத்து வரி 19 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது.

மாநகராட்சியில் மொத்தமுள்ள 44,475 காலிமனைகளின் சொத்து வரி 6.79 கோடியாகும். இதில், ரூ. 1 கோடி 26 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது. 2020-2021ம் நிதியாண்டு சொத்து வரி 80 சதவீதம் எட்டியாலும் அதற்கு முந்தைய நிதியாண்டு பாக்கி சொத்துவரி, மற்ற வருவாய் இனங்கள் வரி உள்ளிட்டவை சேர்த்து ரூ.80.76 கோடி வரிபாக்கியுள்ளது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x