Published : 12 Apr 2021 04:25 PM
Last Updated : 12 Apr 2021 04:25 PM
2-வது ஆண்டாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வங்கிக் கடன், தனியார் நிதி நிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி தமிழ்ப் பண்பாடு மேம்பாட்டு மையம் மற்றும் தமிழன்டா கலைக்கூடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலால் தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து 2-வது ஆண்டாக பாதிக்கப்பட்டுள்ளது. சீசன் நேரத்தில் தடை விதிக்கப்பட்டதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டுப்புறக் கலைஞர்கள்
தமிழகத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், நாதஸ்வரம், மேளவாத்தியம், பாவைக்கூத்து, தெருக்கூத்து, வில்லிசை போன்ற ஏராளமான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன. இந்தக் கலைகளைச் சார்ந்த கலைஞர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு நாட்டுப்புறக் கலைதான் வாழ்க்கை. வேறு தொழில் எதுவும் தெரியாது. நாட்டுப்புறக் கலைகளை நம்பியே இவர்களது குடும்பங்கள் இருக்கின்றன.
வழக்கமாகத் தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களில்தான் கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும். இந்த காலத்தில்தான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அதிகத் தொழில் வாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலான கலைஞர்கள் இந்த 5 மாதம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் ஆண்டு முழுவதும் குடும்பத்தை நடத்துவார்கள். வாங்கிய கடன்களை அடைப்பார்கள்.
கரோனாவால் பாதிப்பு
கடந்த ஆண்டு மார்ச் மாதக் கடைசியில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தத் தடை விதிக்கப்பட்டன. இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் தொழில் இல்லாமல் முடங்கினர். இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு கோயில் விழாக்கள் நடைபெற்று வந்தன.
இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். பல இடங்களில் கோயில் கொடை உள்ளிட்ட விழாக்களுக்கு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு இழந்த வாழ்வாதாரத்தை, இந்த ஆண்டு ஓரளவுக்கு மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் இருந்தனர்.
மீண்டும் முடக்கம்
ஆனால், அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக கடந்த 10-ம் தேதி முதல் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாகக் கோயில் விழாக்கள் நடத்த அனுமதி இல்லை. திருமண நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடக் கூடாது. 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தமிழ்ப் பண்பாடு மேம்பாட்டு மையம் மற்றும் தமிழன்டா கலைக்கூடம் இயக்குநர் செ.ஜெகஜீவன் கூறும்போது, ''கரோனா கட்டுப்பாடுகளால் நாட்டுப்புறக் கலைஞர்கள் 2-வது ஆண்டாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். வாழ்வாதாரம் இல்லாமல் பல இடங்களில் நாட்டுப்புறக் கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் சீசன் நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, நாட்டுப்புறக் கலைஞர்களை, அவர்களது குடும்பங்களை, பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் குழு அமைத்து ஊரடங்கு காலம் முடியும்வரை நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அரசே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், நாட்டுப்புறக் கலைஞர்களின் வங்கிக் கடன், தனியார் நிதி நிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஊரடங்கு காலம் முடிந்து இசைக்கருவிகளைப் பழுது நீக்க நிதி வழங்க வேண்டும். அனைத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரம் காக்க கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மேள தாளம் முழங்க ஆர்ப்பாட்டம்
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் இன்று மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்ப் பண்பாடு மேம்பாட்டு மையம் மற்றும் தமிழன்டா கலைக்கூடம் இயக்குநர் செ.ஜெகஜீவன் முன்னிலை வகித்து, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்ட அனைத்து கிராமியக் கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் நல்வாழ்வு சங்கம், தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரண்டு வந்து தனித்தனியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment