Published : 12 Apr 2021 02:55 PM
Last Updated : 12 Apr 2021 02:55 PM
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 1.10 லட்சம் பேருக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் உள்ளன. முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். ஆதார் மட்டுமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை காண்பித்தும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அதைக் கட்டுப்படுத்துவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.12) ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், "புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மேலும் 1 லட்சம் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளன" என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, "புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளில் 7,271 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. தேவையான அளவு தடுப்பூசி புதுச்சேரியில் உள்ளது. தற்போது 1.10 லட்சம் பேருக்குத் தேவையான தடுப்பூசிகள் புதுச்சேரியில் உள்ளன.
புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு முகக்கவசம் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் மட்டுமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன.
எனினும், தேவைப்படின் தனியாக கோவிட் சென்டரை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் அச்சப்படாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
நாள்பட்ட நோய்களில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தரவும், தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான மருந்துகள் தரவும் நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதேபோல், ஜிப்மரிலும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவோருக்காக மருந்து மாத்திரைகள் சிகிச்சையை புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழக மக்களும் பெறுவதால் அது தொடர்பாகப் பேச உள்ளோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இரண்டாவது நாள் கரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், "கரோனா தடுப்புப் பணியில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தடுப்பூசி போடும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத்துக்கு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டையும் முகாம்களில் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT