Published : 12 Apr 2021 11:38 AM
Last Updated : 12 Apr 2021 11:38 AM
தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் புதிதாகப் பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம், தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியது. அப்போது அமல்படுத்தப்பட்ட பலகட்ட ஊரடங்கால் அனைத்துத் தரப்பு சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும் பாதிப்படைந்தன. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு அவர்களுக்கு நிவாரண உதவி அளித்தது. அந்த வகையில், தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் பதிவு செய்திருந்த கலைஞர்களுக்கு இரு முறை தலா ரூ.1,000 நிவாரண உதவியாக வெவ்வேறு காலகட்டத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், படிப்படியாகத் தமிழகத்தில் குறைந்துவந்த கரோனா தொற்று, இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கம் முதல் அதிகரித்து வருகிறது. நேற்றைய (ஏப்.11) நிலவரப்படி தமிழகம் முழுதும் 6,618 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,124 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா கால சிறப்பு நிவாரண நிதியாக தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் புதிதாகப் பதிவு செய்த தவில், நாதஸ்வரம், தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிவாரணம் வழங்க இன்று (ஏப்.12) தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 6,810 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.1.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT