Published : 15 Dec 2015 03:15 PM
Last Updated : 15 Dec 2015 03:15 PM
உடுமலையில் லட்சம் பேருக்கு ஒரே ஒரு ‘108 ஆம்புலன்ஸ்’ என்ற நிலை இருப்பதால் மருத்துவ உதவி தேவைப்படுவோர் கூடுதல் தொகை செலுத்தி தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை நாடவேண்டிய நிலை உள்ளது.
உடுமலை தாலுகாவுக்குட்பட்ட உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில் 54 ஊராட்சிகள் உள்ளன. அதிலுள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட குக்கிராமங் களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 13 மலைவாழ் குடியிருப்புகளில் சுமார் 4,000-த்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
உடுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், விபத்துக் காலங்களில் தேவைப்படும் அவசர மருத்துவ உதவிக்கும், சிகிச்சைகளுக்கும் உடுமலை அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் கிராமப்புற மக்கள் ‘108 ஆம்புலன்ஸையே’ நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரே ஒரு ஆம்புலன்ஸ் சேவை இருப்பதால் பெரும்பாலான மக்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளுக்கும் இதே ஆம்புலன்ஸ்தான் பயன்படுத்தப்படுகிறது.
அவசரத்துக்கு கிடைக்காததால், 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆம்புலன்ஸ்களையே வரவழைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால், தனியார் ஆம்புலன்ஸ்கள் ‘கூடுதல் கட்டணம்’ வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து உடுமலை அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சவுந்திரராஜனிடம் கேட்டபோது, ‘உடுமலை அரசு மருத்துவமனைக்கு விபத்து காயங்களால் ஒரு மாதத்துக்கு சுமார் 50 முதல் 100 பேர் வரை வருகின்றனர். கடந்த மாதம் மட்டும் 96 பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். அதில் உயர் சிகிச்சைக்காக சரி பாதியினர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உடுமலைக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வசதியிருந்தால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.
மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு கூறும்போது, ‘ஒரு தாலுகாவுக்கு ஒன்று என்ற அடிப்படையில் உடுமலை, மடத்துக்குளத்தில் தலா ஒரு ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. உடுமலையில் 108 சேவை இல்லாத சமயங்களில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கூடுதல் கட்டணத்தில் மக்கள் செல்ல வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டி, கூடுதல் ஆம்புலன்ஸ் வேண்டும். அதே போல், எரிசனம்பட்டி பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் என திருப்பூர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விபத்துக்களால் காயமடைந்து வருவோருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவரும், சி.டி.ஸ்கேன் போன்ற வசதிகளும் இல்லாத காரணத்தால் 80 கி.மீ. தொலைவில் உள்ள கோவைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது. மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் வரை உடுமலைக்கு கூடுதலாக ஒரு ‘108 ஆம்புலன்ஸ்’ சேவை தேவை என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT