Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை நீந்தி இலங்கை விமானப் படை வீரர் சாதனை

ராமேசுவரம்

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர படைத்துள்ளார்.

பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேசுவரம் தீவும், அதைத் தொடர்ந்துள்ள மணல் திட்டு களான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடல் பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக் கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடல் பகுதி இதுவே ஆகும்.

முதல் சாதனை வீரர்

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வி.எஸ்.குமார் ஆனந்தன். நீச்சல் வீரரான இவர் 1971-ம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு நீந்திச் சென்று சாதனை படைத்தார்.

இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட போதிலும் கடும் பயிற்சியை மேற்கொண்டதன் வாயிலாக குமார் ஆனந்தன் நீச்சல், நடனம், தொடர்ந்து மோட்டார் பைக் ஓட்டியது, ஒற்றைக்காலில் நின்றது, தலைகீழாக நின்றது உள்ளிட்ட 9 பிரிவுகளில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

பைக் விபத்தில் இவரது மண்ணீரல் அகற்றப்பட்ட நிலையிலும் 10-வது கின்னஸ் சாதனைக்காக ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். 6.8.1984 அன்று ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போதே குளிர்ந்த கடல் நீரினால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தார்.

இவரது நினைவாக இலங்கை அரசு ரூ.1 மதிப்பிலான தபால் தலையை 1999-ம் ஆண்டு வெளியிட்டு கவுரவித்தது. குமார் ஆனந்தன் நினைவாக அவரது பிறந்த ஊரான வல்வெட்டித் துறையில் இலங்கை அரசு உலகத் தரத்தில் நீச்சல் குளம் ஒன்றையும் அமைத்துள்ளது.

இந்நிலையில், குமார் ஆனந்த னின் சாதனையைப் போன்று, 50 ஆண்டுகள் கழித்து தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு பாக் ஜலசந்தி கடல் பகுதியை (சுமார் 60 கி.மீ. ) நீந்திக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர பெற்றுள்ளார்.

இந்தத் தூரத்தைக் கடப்பதற்கு வி.எஸ். குமார் ஆனந்தன் 51 மணி நேரங்கள் எடுத்திருந்தார். ஆனால் ரோஷான் அபேசுந்தர 28 மணி 19 நிமிடங்கள் 43 வினாடிகளில் நீந்திப் பழைய சாதனையை முறி யடித்தார்.

பாக் ஜலசந்தியை இதுவரை இரண்டு பெண்கள் உட்பட 15 வீரர்கள் நீந்திக் கடந்திருந்தாலும் குமார் ஆனந்தன், ரோஷான் அபேசுந்தர ஆகிய இருவர் மட்டுமே தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு நீந்திக் கடந்தவர்கள் ஆவர்.

மற்ற 13 பேரும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான (30 கி.மீ.) தூரத்தை மட்டுமே கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x