Published : 14 Dec 2015 09:06 AM
Last Updated : 14 Dec 2015 09:06 AM
சென்னையின் மழை வெள்ள பாதிப்புகளையடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் பணிகளில் பிரதான அரசியல் கட்சிகள் 3-வது நாளாக ஈடுபட்டு வருகின்றன.
சென்னையில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில், வெள் ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் மாநகர் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இந்த குப்பைகளை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமன்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்களுடன் அரசியல் கட்சியினரும் குப்பைகளை அகற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக, தேமுதிக, பாஜக, மதிமுக, தமாகா, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் 3-வது நாளாக குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் விவரம் பின்வருமாறு:
திமுக:
திமுக சார்பில் சென்னை மாநகராட்சியின் முன்னால் மேயரும், திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளருமான மா.சுப்ரமணியன், குப்பைகளை அள்ளும் பணியை ஆலந்தூர் பகுதியில் சென்ற வாரம் மேற்கொண்டார்.
இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “அரசியல் கட்சிகள் குப்பைகளை அள்ள வேண்டும் என கருதி நாங்கள் தான் முதலில் களமிறங்கினோம். இதேபோல், பிற பகுதிகளிலும் திமுகவினர் குப்பைகளை அகற்றி வருகின்றனர்” என்றனர்.
மக்கள் நலக்கூட்டணி:
மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வட சென்னை பகுதிகளில் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கடந்த 3 நாட்களாக தரமணி, தாம்பரம், ஆயிரம் விளக்கு, அரும்பாக்கம் பகுதிகளில் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
சென்னைக்கு நேற்று வந்த சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தரமணியில் நேற்று குப்பைகளை அகற்றினார்.
பாஜக:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாஜகவின் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமாகா:
தாம்பரம், முடிச்சூர், ஈஞ்சம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் குப்பைகளை அகற்றினர்.
இஸ்லாமிய கட்சிகள்:
குப்பைகளை அகற்றும் பணிகளில், இஸ்லாமிய இயக்கங்களான மனித நேய மக்கள் கட்சி, தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்டவை பெரும் பங்காற்றி வருகின்றன.
தெருக்களை சுத்தம் செய்வது மட்டுமன்றி, பள்ளிகள், இந்து கோயில்கள் போன்றவற்றையும் இஸ்லாமிய இயக்கத்தினர் சுத்தம் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT