Last Updated : 11 Apr, 2021 06:14 PM

 

Published : 11 Apr 2021 06:14 PM
Last Updated : 11 Apr 2021 06:14 PM

நூல் விலை உயர்வால் செட்டிநாடு கண்டாங்கி சேலை உற்பத்தியாளர்கள் பாதிப்பு: சேலை விலையை உயர்த்த முடியாமல் தவிப்பு

காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் தயாரிக்கப்படும் காட்டன் கண்டாங்கி சேலை.

காரைக்குடி

நூல் விலை உயர்ந்ததால் செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டியால் சேலையை விலையை உயர்த்த முடியாமல் தவிக்கின்றனர்.

இந்தியாவிலேயே பாரம்பரிய அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படுவது செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை தான். இதனை இளம்பெண்கள் விரும்பி வாங்கி அணிகின்றனர்.

சிறிதும் பெரிதுமாக பட்டையான கோடுகள் (அ) கட்டங்கள் (செக்டு) நிறைந்த அவற்றின் டிசைனும் சிறப்பு தான். இந்த சேலைகளை 200 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்குடி, கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் 700 மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறியாக நெசவு செய்து வருகின்றனர்.

செட்டிநாட்டு சேலைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம் தான் மாறுமே தவிர பார்டரில் பெரும்பாலும் ருத்ராட்சம், கோயில் கோபுரம், மயில், அன்னம், போன்ற பராம்பரியமான டிசைன்களே அதிகள் இருக்கும்.

மேலும் இந்த சேலைகளில் டபுள் சைட் பார்டர் இருக்கும். அத்தோடு வேறு எந்த சேலையிலும் இல்லாத 48 இஞ்ச் அகலம், 5.5 மீட்டர் நீளம் இருக்கும். சமீபகாலமாக சிங்கிள் சைட் பார்டர் சேலைகளும் தயாரிக்கின்றனர்.

பெரும்பாலும் குழித்தறி அல்லது உயர்த்தப்பட்ட குழித்தறிகளில் ‘ஷட்டில் நெசவு’ முறையில் கைத்தறியாக நெசவு செய்கின்றனர். இங்கு தயாராகும் சேலைகள் பெங்களூரு, புதுடெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் காட்டான் சேலைகள் தயாரிப்புப் பணி முடங்கியது. ஏற்கெனவே தயாரித்த சேலைகளையும் விற்க முடியாமல் தவித்து வந்தனர்.

பிறகு கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் சேலை தயாரிப்பு பணி புத்துயிர் பெற்றது. இந்நிலையில் நூல் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் மீண்டும் கண்டாங்கி சேலை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கானாடுகாத்தான் நெசவாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: விவசாயத்திற்கு அடுத்தபடியாக அழிந்து வரும் தொழிலாக நெசவாளர் தொழில் மாறி வருகிறது. செட்டிநாட்டு காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு 60-க்கு 60 அளவுள்ள பருத்தி நூலையே பயன்படுத்துகிறோம்.

நான்கரை கிலோ கொண்ட நூல் கட்டை ரூ.1,800-க்கு வாங்கி வந்தோம். மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென ஒரு கட்டிற்கு ரூ.450 வரை விலையை உயர்த்திவிட்டனர்.

இரண்டு கட்டுகள் நூலை பயன்படுத்தி 10 சேலைகள் தயாரிக்க முடியும். பணியாளர் கூலி உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஒரு சேலையை ரூ.1,500-க்கு மேல் தான் விற்க வேண்டும்.

ஆனால் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் சேலைகளோடு போட்டுயிடுவதற்காகவும் வாடிக்கையாளர்களுக்காகவும் ரூ.700 முதல் 900-க்குள் விற்கிறோம். மேலும் பணியாளர்களும் தற்போது கூலி உயர்த்தி கேட்கின்றனர். இதனால் இனி தொழில் செய்ய முடியாநிலை உள்ளது. மத்திய அரசு நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x