Published : 11 Apr 2021 05:16 PM
Last Updated : 11 Apr 2021 05:16 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த 37 சிறப்புக் குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுக்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இடம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் பொது இடங்களில் கடைபிடிப்பதை உறுதி செய்திடவும், அவ்வாறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்களுக்கு அரசு அறிவுரையின்படி அபராதம் விதித்திடவும் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு சிறப்புக் குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும், உதவி ஆணையர்கள் தலைமையில் தலா ஒரு குழு என மொத்தம் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகளுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்கள் தலைமையில் தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளுக்கும் 19 குழுக்கள், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா ஒரு குழு என மொத்தம் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் போன்ற வருவாய் துரை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொது இடங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் கரோனா தடுப்பு தொடர்பாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உரிய அபராதம் வசூல் செய்ய வேண்டும். இந்த குழுவினர் மால்கள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், சந்தைகள் (காய்கறி, மீன், இறைச்சி கடைகள்), உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு செய்திட வேண்டும்.
தனிமைப்படுத்துதலை மீறுவோருக்கு ரூ.500, முறையாக வாய் மற்றும் மூக்கினை நன்றாக மறைத்து முக்கவசம் அணியாமல் இருப்போருக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, தனிநபர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை மீறினால் ரூ.500, சலூன் கடை, ஸ்பா, உடற்பயிற்சி கூடம் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ கரோனா தொடர்பான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் ரூ.5000, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசாங்க விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500, வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5000 அபராதம் வசூலிக்க வேண்டும்.
இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை நல்ல முறையில் செய்து தினசரி பணிமுன்னேற்ற அறிக்கையினை மாலை 5 மணிக்குள் ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அலுவலர்கள் அனைவரும் மறு உத்தரவு வரும் வரை இப்பணியில் இருக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT