Published : 11 Apr 2021 04:15 PM
Last Updated : 11 Apr 2021 04:15 PM
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் மேக்னா யானை ஒன்று உயிரிழந்தது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் வனச் சரக பகுதிக்கு உட்பட்ட சின்னாற்றுப் படுகையில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது இன்று(ஏப்.,11) வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
எனவே, ஒகேனக்கல் வனச்சரகர் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று உயிரிழந்த யானையை ஆய்வு செய்தனர். சுமார் 25 வயது மதிக்கத் தக்க அந்த யானை மேக்னா வகை யானை ஆகும். அதாவது, கொம்பு எனப்படும் தந்தங்கள் இல்லாத ஆண் யானை மேக்னா யானை என்று அழைக்கப்படும்.
இந்த யானையின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அது 4 நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
யானையின் உடலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட, வனத்துறைக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், வனத்துறை விதிகளின்படி அதே பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
யானை உடல்நலக் குறைவால் உயிரிழந்ததா, மாசுபட்ட நீரை பருகியதால் உயிரிழந்ததா, விஷ காய் அல்லது தாவரத்தை உண்டதால் உயிரிழந்ததா என்ற தகவல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 2 யானைகள் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஓர் யானை உயிரிழந்துள்ளது.
எனவே, யானைகளின் தொடர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, புதிதாக யானைகள் உயிரிழக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT