Published : 11 Apr 2021 02:56 PM
Last Updated : 11 Apr 2021 02:56 PM
ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் அரிசி என்பது வழக்கமான நடைமுறை என்பதாலும், ரமலான் நோன்பு தொடங்க ஒருசில நாட்களே உள்ள காரணத்தினாலும் தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை விரைவில் பெற்று பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தேவையான பச்சரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து பின் ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த மாதத்தில் வசதி படைத்த அனைவரும் தமது வருமானத்தை கணக்கிட்டு அதில் குறிப்பிட்ட சதவீதத்தை தானமாக ஏழைகளுக்கு அளிப்பர். நோன்பிருக்கும் 30 நாட்களும் அதிகாலை நோன்பு வைக்கும் இஸ்லாமியர்கள் அன்னம், தண்ணீர் எதுவும் அருந்தாமல் மாலை சூரிய அஸ்தமான நேரத்தில் நோன்பை முடிப்பார்கள்.
பள்ளிவாசல்களில் இதற்காக நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்புக்கஞ்சி வழங்கப்படும். வழக்கமாக அப்பகுதி இஸ்லாமியர்கள், வசதி படைத்தவர்கள் என நோன்புக்கஞ்சிக்கு தேவையானவற்றை அளிப்பார்கள், கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு நோன்புக்கஞ்சிக்காக பச்சரியை இலவசமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஊரடங்கு நேரத்திலும் அரிசி வழங்கப்பட்டது.
இம்முறை தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் இதுவரை அரிசி வழங்கப்படவில்லை. நோன்புக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் நோன்புக்கஞ்சி தயாரிக்க தேவையான அரிசியை பள்ளிவாசல்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஜவாஹிருல்லாவும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:
“முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதும், நோன்பினைத் துறக்க நோன்பாளிகளுக்கு இலவச நோன்புக் கஞ்சியை வழங்குவதும் வழக்கமான நடைமுறையாகும். ஆண்டுதோறும் நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தமிழக அரசின் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இலவச பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும் பள்ளிவாசல்களுக்கான அரிசி வழங்குவது தொடர்பான அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் அரிசி என்பது வழக்கமான நடைமுறை என்பதாலும், புனித ரமலான் நோன்பு தொடங்க ஒருசில நாட்களே உள்ள காரணத்தினாலும் தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை விரைவில் பெற்று பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தேவையான பச்சரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு ஜவாஹிருல்லா வேண்டுகோள் வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT