Published : 11 Apr 2021 02:10 PM
Last Updated : 11 Apr 2021 02:10 PM
தமிழகத்தில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதி என அரசு அறிவித்திருந்த நிலையில் ரமலான் மாதத்தில் தராவீஹ் சிறப்பு தொழுகை நடத்த ஒரு மாதம் இரவு 10 மணி அவரை அனுமதிக்க இஸ்லாமிய இயக்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்தது. தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா தொற்றைக்கட்டுப்படுத்த மீண்டும் கட்டுபாடுகளை அரசு அறிவித்தது.
அதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், இனி திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. ஷாப்பிங் மால்கள், கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி. ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி. உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. தமிழகத்தில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப் 10 முதல் தடை. இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம். திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. உள் கூட்டங்களில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. மதவழிப்பாடுகளுக்கு இரவு 8 மணி வரை மட்டும் அனுமதி.
அரசு, தனியார் பேருந்துகளில் நின்று பயணிக்கத் தடை. இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. இதில் இந்த மாதம் 14 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் அடுத்த 30 நாட்கள் நோன்பு காலத்தில் தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகை இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடக்கும்.
இதனால் நோன்புக்காலமான 30 நாட்களுக்கு வழிப்பாட்டுக்கான தடை நேரத்தை இரவு 10 மணி வரை என மாற்றவேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் கோரிக்கை வைத்தன. இதை ஏற்று 8 மணி என்பதை இரவு 10 மணி வரை என அரசாணை வெளியிடப்பட்டது.
இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்றதற்கு அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் நன்றி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT