Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
கல்வியில் உயர்ந்த நிலையாக முனைவர் பட்டம் எனும் பிஎஃச்டியை கேள்விப் பட்டிருப்போம். அதையும் தாண்டி ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ எனும் மூத்த முனைவர் பட்டம் என்னும் உச்ச நிலை ஆராய்ச்சி பட்டப்படிப்பு ஒன்று உள்ளது நம்மில் சிலர் இதை அறிந்திருக்கலாம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டீனாக பணிபுரிந்து, ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் கே.ரகுகாந்தன் இந்தப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறை பேராசிரியராக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த ரகுகாந்தன், பல்கலைக்கழக தேசிய மாணவர் படையின் பொறுப்பு பேராசிரியராகவும் சேவையாற்றி வந்தார்.
பொறியியல் உற்பத்தித் துறையின் தலைமைப் பேராசிரியராக 6 ஆண்டுகளும், ஒரு வருடம் டீனாகவும் பணிபுரிந்து வந்த ரகுகாந்தன், கடந்த ஜீன் 2020-ல் ஓய்வு பெற்றார்.
அவர் ஓய்வு பெறும் போது, ‘டாக்டர் ஆஃப் சயின்ஸ்’ எனும் மூத்த முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
“பிஎஃச் டி எனும் முனைவர் பட்டம் முடித்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரே ‘டாக்டர் ஆஃப் சயின்ஸ்’ எனும் மூத்த முனைவர் பட்டம் பெற முடியும். பொறியியல் துறையில் இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்திலோ, சென்னை ஐஐடியிலோ எவரும் இந்தப் பட்டத்தை முடித்ததில்லை. நான் அறிந்த வரையில் நான் மட்டுமே முடித்திருப்பதாக கருதுகிறேன்.
எனது பணிக்காலத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறையின் தலைவராக செயலாற்றிய போது, என்னிடம் பயின்ற சுமார் இரண்டாயிரம் மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்.
எனது வாழ்நாளில் பொறியியல் துறையில் இதையும் தாண்டி பட்டங்களைப் பெற வேண்டும்; உயர் சாதனைகளை புரிய வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டே இருக்கிறது” என்கிறார் பேராசிரியர் டாக்டர் ரகுகாந்தன்.
பிஎஃச்டி பட்டம் பெற்ற பின், 10 வருட தொடர் ஆராய்ச்சியின் வழியாய் இந்த ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ உயர் ஆராய்ச்சி முனைவர் பட்டத்தைப் பெற வேண்டும். பெறுவது. இதன் சேர்க்கை விதிகள் மிக கடினம்.
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி உலோகங்களை இணைக்கும் ஆராயச்சி யில் ரகுகாந்தன் பிஎஃச் டி மற்றும் டிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார். ஜப்பான் குமாமோட்டோ பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராகவும் (visiting professor) பணியாற்றியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT