Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்ப்பதே பிறவிப் பயன்களில் முதன்மையானது.
தமிழகத்தில் மொத்தம் 8 மாவட்டங்களே இருந்த காலத்தில் ஒருங்கிணைந்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது.
இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என 3 மாவட்டங்களாக பிரிந்திருந்த போதிலும் ஒருங்கிணைந்த மாவட்டமான தென்னாற்காடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த, சேர்த்துக் கொண்டிருக்கும் முக்கியஸ்தர்களை இங்கு நினைவு கூற வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஆன்மிக பெரியோர்...
சைவ சமயக் குரவர்களில் திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமான் பண்ருட்டியை அடுத்த திருவாமூரிலும், சுந்தரர் திருநாவலூரிலும், சந்தானக் குரவர்கள் நயனார்கள் என போற்றப்படும் மறைஞான சம்பந்தர், மெய்கண்டார் பெண்ணாடத்திலும், உமாமபதி சிவன் தில்லையிலும், அருள்நந்தி சிவாச்சாரியார் திருத்துறையூரிலும்,தேவாரத்தை தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பி சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரிலும் பிறந்தவர்கள்.
திருவருட்பாவை இயற்றி, சன்மார்க்கத்தை வலியுறுத்திய வள்ளலார் வடலூரை அடுத்த கருங்குழியிலும், கர்நாடக மக்களுக்கு அருள்பாலித்து வரும் ராகவேந்திரர் புவனகிரியிலும், நடிகர் ரஜினிகாந்தின் மானசீகக் கடவுளாக எல்லோராலும் அறியப்படும் பாபாஜி எனும் நாகராஜ் பரங்கிப்பேட்டையிலும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் மானசீக குருவாக கருதப்படும் மூக்குப்பொடி சித்தர் எனும் மொட்டையக் கவுண்டர் சின்னசேலம் அருகே உள்ள ராஜாபாளையத்திலும், வைணவ ஆச்சாரியர்களான நாதமுனிகள் வீரநாரயண புரத்திலும், சுவாமி நிகமானந்தா மகா தேசிகன் திருவகீந்தபுரத்திலும், காஞ்சி மகாப் பெரியவரும் விழுப்புரத்திலும் பிறந்தவர்கள்.
இலக்கிய உலகில்...
ஒரு மொழியில் படைப்பிலக்கியம் பெரும் பாய்ச்சலுடன் முன்னெழும் காலகட்டங்களை ஆராய்ந்து பார்த்தால் அவ்வெழுச்சிக்கான திசைகளையும் தத்துவார்த்த அடிப்படைகளையும் வடித்துத் தருபவர்களாகச் சில கோட் பாட்டாளர்கள் இருந்திருப்பதை அறிந்திருப்போம்.
1960 முதல் 1980 வரை ஓங்கி ஒலித்த அத்தகைய குரல்கள் இப்போது அருகி விட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தான் மொழி படைப்பிலக்கியத்தின் மூலம் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்களை நினைவுப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.
ஜெயகாந்தன்
சென்னை வட்டார மொழியை தனது படைப்புகளில் பதித்து தனக்கென்று இலக்கிய கூட்டத்தை கட்டியெழுப்பிய கடலூர்காரர் தான் எழுத்தாளர் ஜெயகாந்தன். தமிழ் இலக்கியத்தின் மைல்கல்லாக கருதப்படும் ஜெயகாந்தன், ஜனசக்தி பத்திரிக்கையில் அச்சுக் கோர்ப்பவராக, ப்ஃரூப் ரீடராக தன் பணியைத் தொடங்கியவர். ஆனந்த விகடனில் சிறுகதைகளை எழுதி பரபரப்புக்குள்ளாகி தனக்கென வாசகர் வட்டத்தையும் வடிவமைத்துக் கொண்ட, இவர்,சாகித்ய அகடாமி, ஞானபீட விருது பெற்றவர்.
கவிஞர் பழமலய்
மண் மணம் கமழும் மக்கள் மொழியில் சனங்களின் கதையைத் தந்து தமிழ் கவிதைக்கு புத்துயிர் ஊட்டி புதுவழிக் காட்டிய கவிஞர் பழமலய், பிராந்திய மக்களின் கதைகளையும் அவர்களது வாழ்வின் அவலங்களையுமே கவிதைகளில் பதிவு செய்தார். திட்டக்குடியை அடுத்த குழுமூரில் பிறந்து, விருத்தாசலத்தில் பள்ளிப் படிப்பை முடித்து விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது விழுப்புரத்தில் வசித்து வருகிறார்.
சிறுகதை சிற்பி ராசேந்திரசோழன்
வட்டார வழக்கை உள்வாங்கி சிறுகதை வடிவத்தில் கூர்மை, மவுனம், மொழியின் செம்மை என நவீன தமிழ் சிறுகதை படைப்பாளி ராசேந்திரசோழன் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் வசித்து வருகிறார். ‘அணுசக்தி மர்மம்’, ‘தெரிந்ததும் தெரியாததும்’, ‘அரங்க ஆட்டம்’, ‘பின் நவீனத்துவம்’, ‘பித்தும் தெளிவும்’ போன்ற முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
சிற்றிதழ்களின் சிற்பி வே.சபாநாயகம்
நவீன தமிழ் இலக்கியத்தின் ஆர்வலரும், சிற்றிதழ்களின் சிற்பியுமான பேராசிரியர் வே.சபாநாயகம் விருத்தாசலத்தை அடுத்த டி.வி.புத்தூரில் பிறந்தவர்.‘புற்றில் உரையும் பாம்பு’, ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’ இவர் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் ஆகும்.
ஔவை துரைசாமிப்பிள்ளை
மிகச்சிறந்த தமிழறிஞரும், சைவ இலக்கிய வரலாறு, சிலப்பதிகார ஆராய்ச்சி போன்ற பல நூல்களுக்கு அருமையான உரை எழுதிய ஔவை துரைசாமிப்பிள்ளை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஔவையார்குப்பத்தில் பிறந்து, உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்று, மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.
சாண்டில்யன்
கடல்புறா, யவன ராணி, விலை ராணி, பல்லவ திலகம் உள்ளிட்ட 48 நாவல்களை எழுதி, வாசிப்பை வசப்படுத்திய பாஷ்யம் எனும் சாண்டில்யன் திருக்கோவிலூரில் பிறந்தவர்.
நாவேந்தன்
நாவேந்தன் எனும் முருகேசன் கவிதை தொகுப்பு, மொழி பெயர்ப்பு கட்டுரைகள் கவிதைகள் மூலம் அறியப்பட்டவர். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம்.
விழி.பா.இதயவேந்தன்
சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதி நாடகம் என பன்முகம் கொண்ட எழுத்தாளரான விழி. பா.இதயவேந்தன்,விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை சொந்த ஊராகக் கொண்டு, கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
பாடலாசிரியர் அறிவுமதி
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் என அறியப்படும் மதியழகன் எனும் அறிவுமதி விருத்தாசலத்தை அடுத்த சு.கீணணூரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், ‘நட்புக் காலம்‘, ‘மணிமுத்தாற்றங் கரையில்’, ‘புல்லின் நுனியில்’, ‘பனித்துளி’ போன்ற பல கவிதைத் தொகுப்புகளையும் ‘வெள்ளைத் தீ’ எனும் சிறுகதைப் தொகுப்பையும் படைத்துள்ளார்.
சுவாமிநாத தேசிகர்
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த வளவனூரில் பிறந்து, சைவ சித்தாந்தத்தை பின்பற்றி, சைவ சமயக்குரவர்களை வாழ்த்தி நால்வர் நான்மணி மாலை எனும் கவிதை நூலையும், 30-க்கும் மேற்பட்ட சைவ சமயச் சார்பு நூல்களையும் இயற்றியுள்ளார்.
கண்மணி குணசேகரன்
சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புகளை இயற்றிய கண்மணி குணசேகரன் வட்டார மொழியில் புதினங்களை எழுதுவதில் வல்லவர். இவர் விருத்தாசலத்தை அடுத்த இருப்பு கிராமத்தில் பிறந்தவர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி மாத வருவாய் ஈட்டிவரும் கண்மணி குணசேகரன் அடிப்படையில் விவசாயி. மண்ணுக்கு உழைத்து, மண்வாசனையை எழுத்துக்கள் வடிவில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியை இலக்கியப் பணிக்கு நடுவே இயல்பாக செய்து வருவதே இவரின் சிறப்பு.
இமையம்
இமையம் எனும் புனைப்பெயரில் எழுதும் வெ.அண்ணா மலை `கோவேறு கழுதைகள்’ எனும் புதினம் வாயிலாக தமிழ் வாசகர்களை சென்றடைந்தவர். இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர் எழுதிய ‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கடந்த மாதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஜெயகாந்தரனுக்குப் பிறகு இவரும் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிஷா நடராஜன்
சிறுவர் இலக்கிய எழுத்தாளராக அறியப்படும் கடலூரைச் சேர்ந்த ஆயிஷா நடராஜன், ‘ஆயிஷா’ என்ற சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் வாசகர்களிடம் இவர் ஆயிஷா நடராஜனாகி விட்டார்.பள்ளியின் தலைமையாசிரியர் எனும் பொறுப்பிலிருந்து நெறி பிறழாமல் பாங்குடன் பணியாற்றிவரும் ஆயிஷா நடராஜன் அடிப்படையில் ஒரு பொதுவுடமைவாதி.தன் படைப்புகளில் மார்க்சிய சித்தாந்தத்தை வலியுறுத்துவதை தவறுவதில்லை.
பழ. அதியமான்
தமிழக ஆய்வாளர்களின் குறிப்பிடத்தக்கவரும், திராவிட சிந்தனையாளரும், பழ.அதியமான், தமிழக ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர். திராவிட இயக்க வரலாற்றுக்குப் பெரும் பங்காற்றியவர்.
சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சலை அம்மாள்
சுதந்திர போராட்ட தியாகிகளின் வரிசையில் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் முத்திரை பதித்தது போன்று எவரும் இருக்க வாய்ப்பில்லை. அவரது கணவர் முருகப்ப படையாட்சி, மகள் லீலாவதி என இவரது குடும்பமே நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். தனிநபர் சத்தியாக்கிரகம் என பல்வேறு போராட்டங்களின் ஈடுபட்டு கடலூர், திருச்சி, வேலூர்,பெல்லாரி ஆகிய சிறைகளில் தண்டனை அனுபவித்தவர்.
தியாகி திட்டக்குடி கருப்பையா
திட்டக்குடியைச் சேர்ந்த கருப்பையா சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 3 முறை அலிகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு, சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் கருப்பையா.
இவரும், காரமராஜரும், சிறையில் இருந்த போது, கருப்பையாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது காமராஜர் உடன் இருந்ததால், அவரது பெயரை தனது மகனுக்கு சூட்டும்படி சொல்லியனுப்பியதன் பேரில், அவரது மகனுக்கு ‘காமராஜ்’ என பெயர் வைக்கப்பட்டது.
எஸ்.பி.கல்யாணசுந்தரம்
பெரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான கல்யாண சுந்தரம், வெள்ளையனே வெளியேறு, தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்ற இவரும் திட்டக்குடியைச் சேர்ந்தவரே.
சி.என்.தண்டபாணி பிள்ளை
ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் கடலூரில் ரயில் நிலையத்தில் இவரது தலைமையில் பாரதியார் உரையாற்றினார். அதற்காக இவர் பணி நீக்கம் செய்யப்பட்டு, இரட்டை சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இவரது சிறைத் தண்டனைக்கு எதிராக ராஜாஜி கிளர்ச்சி செய்ததன் விளைவாக இவரது சிறை தண்டனையில் ஒன்று குறைக்கப்பட்டது.
அசலாம்பிகை அம்மையார்
சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்த அசலாம்பிகை கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தவர். மகாத்மா காந்தி குறித்து பல நூல்களையும் எழுதிய இவர்,சுதந்திர போராட்ட பிரச்சாரகராகவும் விளங்கினார்.
நயினியப்ப பிள்ளை
சுதந்திர போராட்டத்திற்கு மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தென்னாற்காடு மாவட்டம் முழுவதும் இவரது கால் தடம் படாத இடங்களே இல்லை எனக் கூறலாம். ஒத்துழையாமை இயக்கம்,உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சிறை சென்றவர், சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
கி.சுப்புராயலு ரெட்டியார்
கடலூரை பூர்வீகமாகக் கொண்ட கி.சுப்புராயலு ரெட்டியார், பண்ருட்டியில் யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் செய்து நடை பயணமாக சென்னை சென்று கைதாகி கடுங்காவல் தண்டனை அனுபவித்தவர். ஆகஸ்டு புரட்சியின் தடை மீறியதற்காக 6 மாதங்கள் அலிபுரம் சிறையில் தண்டனை அனுபவித்தவர்.
எஸ்.டி.சின்னச்சாமி ரெட்டியார்
காங்கிரஸ் கட்சியில் நிர்வாகத் திறமையோடு செயல்பட்ட சின்னச்சாமி ரெட்டியார் பாரதியாரின் பாடல்களைப் பாடி மக்களைத் திரட்டி, கள்ளுக்கடை மறியல், அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற இவரது பூர்வீகம் கடலூர்.
ஆதி நாராயண ஐயர்
காந்தியின் கிராம புனருத்தாரண பணியை மேற்கொண்டவர், முதன் முதலில் சோஷலிஸ்ட் இயக்கத்தை தொடங்கி, புதுச்சேரியில் இருந்து கைத்துப்பாக்கியை கடத்தி சிட்டாங்கிற்கு அனுப்பியவர், பின்னாளில் ஒத்துழையாமைப் போரில் கலந்து கொண்டு சிறை சென்ற இவரது பூர்வீகம் விழுப்புரம்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஓமந்தூரில் பிறந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த இவர், சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மது விலக்கை அமல்படுத்தினார்.
தற்கால அரசியலில் தடம் பதிக்கும் தலைவர்கள்
தற்கால அரசியலில் திராவிடத் தலைவர்களில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கும் கி.வீரமணி கடலூர் முதுநகரில் பிறந்து, தஞ்சை மாவட்டம் வல்லத்தில் வசித்து வருகிறார். திராவிடர் கழகத் தலைவராகவும், விடுதலை நாளிதழின் ஆசிரியராகவும், பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளராகவும் விளங்கி வருகிறார்.
எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி, ஆற்காடு சகோதரர்கள் என அழைக்கப்பட்ட ராமசாமி முதலியார், பண்ருட்டி ராமசந்திரன், லட்சுமணசாமி முதலியார், மும்பை ஹாஜி மஸ்தான் ஆகியோர் கடலூரில் பிறந்தவர்கள்.
வன்னியர்களின் அடையாளமாக அறியப்பட்ட எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி, பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரைக் கடந்து, வன்னிய சமுதாயத்தின் தனி பெரும் சக்தியாக திகழ்ந்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தைச் சேர்ந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய மனித உரிமைக் கட்சியின் தலைவர் எல். இளையபெருமாள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் ஆகியோரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையத்தை சொந்த ஊராகக் கொண்டு தனது ஊர் பெயரையே தனது தலைப்பெழுத்தாக இணைத்துக் கொண்டு தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் இந்திய தேசிய காங்கிரஸின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி. ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக என படிப்படியாக முன்னேறி தமிழக காங்கிரஸ் தலைவராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டின் மூலம் பிரபலமாகி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைக்குள்ளாகி, இன்றைக்கு தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகித்து வரும் ஆடிட்டர் மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் சொந்த ஊர் விழுப்புரத்தை அடுத்த பானாம்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கலை உலகில்...
கலையுலகைப் பொறுத்தவரை திரையில் தோன்றும் நாயகர்களைக் காட்டிலும் அதன் பின்னணியில் பணியாற்றியவர்களின் பங்களிப்பே இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது என்ற போதிலும் வெள்ளித் திரையில் மின்னிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூலம் பெருமையடைகிறது விழுப்புரம்.
விழுப்புரம் பெருமாள் தெருவில் சிவாஜி கணேசன் பிறந்தாலும், அங்கு வாழவில்லை என்ற போதிலும், தன் பெயரோடு விழுப்புரத்துக்கு பெருமை சேர்த்தவர் விழுப்புரம் சின்னச்சாமி கணேசன். தென்னக ரயில்வேயில் பணிபுரிந்த இவரது தாத்தா ஓய்வு பெறவே, அங்கிருந்து திருச்சி, பின்னர் வந்தவாசி என இடம் பெயர்ந்து கொண்டே போனார் சிவாஜி.
மயிலம் வஜ்கரவேலு முதலியார் சிதம்பரம் கனகசபை பிள்ளை, ஸ்வர்ண வெங்கடேச தீட்சிதர், கர்நாடக இசையில் தனித்தடம் பதித்த நெய்வேலி சந்தான கோபாலன், அண்மையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நாட்டுப்புற பாடல் கலைஞர் வேல்முருகன் உள்ளிட்டோர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இம்மண்டலத்தில் பிறந்து இயக்குநர்கள் தங்கர்பச்சான், பிரபு சாலமன் மற்றும் வெற்றிமாறன் போன்றவர்கள் வெள்ளித் திரையில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT