Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
காடுகளிலும், புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினம் கவுதாரி. தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது. இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும்.
இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூவல், பிற கவுதாரிகளை அழைக்கவல்லதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. கவுதாரி கூவியவுடன் எங்கோ இருக்கும் மற்ற கவுதாரிகள் சத்தம் வரும் திசை நோக்கி பறந்து. தவழ்ந்து வரும்போது விரித்து வைத்து சமூக விரோதிகள் அவற்றைப் பெருமளவில் பிடித்து விற்கின்றனர்..
கவுதாரி இறைச்சியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிப்பாகவும், உடல் வலிமை கூடுவதாகவும், நெஞ்சு சளி குறையும் என்று கூறியும் இதனை வேட்டையாடுகின்றனர். அவற்றை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து மக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்கின்றனர்.
சமீப காலமாக விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் நடமாடும் அரிய வகை பறவைகளை, வேட்டைக் கும்பல் பிடித்து வந்து அவற்றை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது எனக் கூறி பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை முழு நேர தொழிலாக சிலர் செய்து வருகின்றனர்.
ஒரு ஜோடி கவுதாரி ரூ 300 முதல் 400 வரையிலும். மேலும் வாங்கும் நபரின் ஏமாறும் தன்மையைக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்."
இது தொடர்பாக வனத்துறை அலுவர்களிடம் கேட்டபோது, ”பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏதாவது வதந்திகளை கிளப்பி, இந்தப் பறவைகளை பிடித்து வந்து சிலர் விற்பனை செய்கின்றனர். கவுதாரி பறவைகளை பிடித்துச் சாப்பிட்டால் அதை விற்பனை செய்தவர்கள், வாங்கி சாப்பிட்டவர்கள் இருவர் மீதும் வனத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.
காடுகளில் வாழும் பறவை, மிருகங்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உண்டு” என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT