Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
உலகின் பழங்காலத் தொழில்களில் ஒன்றாக மண்பாண்டத் தொழில் இருந்து வருகிறது. நமது மூதாதையர்களின் அன்றாட வாழ்வியலின் ஒரு வலுவான பிணைப்பாகவே இந்த மண்பாத்திரங்கள் இருந்துள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு பயன்பாடுகளிலும் இந்த பாத்திரங்களும் அவர்களுடன் இணைந்தே பயணித்து வந்திருக்கிறது.
இதன் தன்மையும், வடிவமைப்பும் காலம்கடந்த நிலையைக் கொண்டிருப்பதால் தொல்பொருள் கண்டெடுப்பில் இன்றளவும் இப்பொருட்கள் நமக்கு கிடைத்து வருகின்றன.
பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி, பானைகள், உடைந்த மட்பொருட்கள் என்று அத்தனையும் களிமண்ணால் நேர்த்தியாக செய்யப் பட்டவையே ஆகும்.
இதன் மூலம் அக்கால வாழ்க்கை முறையையும், கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அருங்காட்சி யகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழங்கால பொருட்களில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவற்றிற்கு இணையாக இதுபோன்ற மண்பாண்ட சிதைவுகளும் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. அன்றைக்கு மண் சார்ந்து வாழ்ந்த மக்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தியே வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். அந்த வகையில் இந்த மண்பாண்டப் பொருட்கள் இன்றைக்கும் நம்முடன் இணைந்து பயணித்து வருகின்றன.
காலஓட்டத்தில் உலோகப் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித் தாலும் அதன் மூலம் ஏற்பட்ட உடற்கூறு மாற்றம் மீண்டும் மண்பாண்டங்களின் பக்கம் பார்வையை திருப்பி உள்ளது. இதற்காக குயவர்களும் வடிவமைப்புகளில் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
மினரல் வாட்டர் பயன்பாட்டுக்குப் பிறகு முகர்ந்து குடிக்கும் பழக்கமே மாறிவிட்டது. இதை உணர்ந்து மண்பானைகளில் நீர்பிடிப்பதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலத்துக்கு ஏற்ப இப்பொருட்களின் மாற்றத்தினால் இளைய தலைமுறையின் கவனத்தையும் இவை ஈர்த்துள்ளன. 5 லிட்டர் முதல் 18 லிட்டர் வரை பல்வேறு அளவுளில் இதுபோன்ற மண்பானைகள் கிடைக்கின்றன. உலோகப் பாத்திரங்களின் வடிவமைப்பை எதிர்கொள்ளும் வகையில் இதிலும் பல்வேறு வித்தியாசங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
பீப்பாய் பானை, சிலிண்டர் பானை, மொடா பானை என்ற பெயரில் வெவ்வேறு உருவங்களாக விற்பனைச் சந்தைக்கு வந்துள்ளன. இவை அனைத்தும் அதிகளவு கொள்ளவு கொண்ட பானைகளாகும். சிலிண்டர் பானை என்பது சமையல் எரிவாயு உருவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பீப்பாய் பானையில் மினரல் வாட்டர் கேன் கவிழ்த்து வைக்க வசதியாக மேற்புரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீர்பாத்திரம் என்ற நிலையைக் கடந்து தற்போது மண்பாண்டங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்காக முன்னிறுத்தப்பட்டுள்ளன. புறா தங்கி முட்டையிடுவதற்காக புறா கலயம், அதே போல் குருவி கலயம், லவ்பேர்ட்ஸ் தங்குவதற்கான கலயம் என்று பறவைகளுக்காக மண்பாண்டங்கள் அதிகளவில் களத்துக்கு வந்துள்ளன.
பிளாஸ்டிக் தண்ணீர் கேனைப் போன்று உருவாக்கப்பட்ட மண்பாண்ட பாட்டில், காய்கறிகளை பரிமாற பயன்படுத்தும் இரட்டைத் தூக்கு, தயிர் கலயம், குழந்தைகள் விளையாட பல்வேறு உருவங்களிலான பொம்மைகள், சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வண்ணமிகு உண்டியல்கள், தண்ணீர் டம்ளர்கள், தேனீர் கடைகளில் பயன்படுத்துவதற்காக ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய சிறு டம்ளர்கள், மீன்குழம்பு சட்டி, பருப்புச் சட்டி, தோசைச் சட்டி, குழம்பு, ரசத்துக்கென்று பல்வேறு வகையான சட்டிகள் என்று உலோகப்பாத்திரங்களுக்கு இணையாக சமையல் பாத்திரங்களிலும் ஏராளமான வடிவமைப்புகள் வந்து விட்டன.
உணவை கடந்து ஆன்மிகம், வழிபாடுகள், அலங்காரம் போன்றவற்றுக் காகவும் மண்பாண்டங்கள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. துளசிமாடம், நேர்த்திக்கடன் மாடம், பல்வேறு வகையான விளக்குகள், குபேர பானை, மேஜிக் விளக்கு என்று ஏராளமாய் அணிவகுத்து நிற்கின்றன.
இது குறித்து தேனி பங்களாமேட்டைச் சேர்ந்த வியாபாரி பி.முத்துவேல் பாண்டியன் கூறுகையில், மண்பானைக்கு நீரை குளிரூட்டும் தன்மை அதிகம். இதனால் கோடைகாலங்களில் இதன் விற்பனை அதிகம் இருக்கும். மேலும் மோர், கூழ் போன்றவைகளை யும் இதுபோன்று பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பானையைப் பொறுத்தளவில் ஒரு ஆண்டு பயன்படுத்தலாம். அதன்பின்பு நீரில் உள்ள உப்புகள் உள்ளுக்குள் படிந்து விடுவதால் குளிரூட்டும் தன்மை குறைந்துவிடும். எனவே இப்பானையை புளி போன்ற சமையல் பொருட்களை வைக்க பயன்படுத்தலாம்.
கருப்பு வண்ணத்தில் உள்ள பாத்திரங்களுக்கு இரண்டு முறை வேக்காடு கொடுத்து எடுப்பதால் கெட்டித் தன்மை அதிகம் இருக்கும். குறிப்பாக சமையலுக்கு மண் பாத்திரங்களை பயன்படுத்தினால் அதிக ருசி கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும். இதனால்தான் பல ஓட்டல்களிலும் மண்பானை உணவுகள் அதிகரித்து வருகின்றன, இவ்வாறு அவர் கூறினார்.
பயன்படுத்தி தூக்கி எறியும் தன்மை தற்போது பொருட்களிலும், உறவுகளிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு கலாச்சார மாற்றங்களை எதிர்கொண்டு இப்பாத்திரங்கள் நவீன உலகத்துக்குள்ளும் தடம்பதித்து நிற்கின்றன. எவ்வகையான உபயோகம் என்றாலும் மண்பாண்டத்தை பயன்படுத்தும் போது சின்னதாய் நம் மனதில் பாரம்பரியமும், மூதாதையரின் நினைவுகளும், வந்து செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. எனவே இவற்றை அன்றாட புழக்கத்தில் அதிகம் உபயோகிக்க வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
யூ டியூப்பில் முன்னணி
யூடியூப் உணவுச் சேனல்களில் பலரும் மண்பாத்திர சமையல்களையே முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ஏராளமான பார்வையாளர்களும், பகிர்வுகளும் அதிகரிப்பதால் பலருக்கும் இப்பாத்திரங்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும் இயற்கை உணவு, பாரம்பரிய சமையலிலும் இயற்கை ஆர்வலர்கள் மண்பாத்திரங்களின் சிறப்புகளை விளக்குவதால் இதன் விற்பனை அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT