Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் திருட்டு: பயணிகள் காத்திருக்கும் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் நபர்கள்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம், சிசிடிவி கண்காணிப்பு இருந்தும் பயணிகளிடம் திருட்டுகள் அதிகளவில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் இருக்கைகளில் சிலர் பகலிலேயே தூங்குவதற்கு பயன்படுத்துவதால் நின்றுகொண்டே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

திண்டுக்கல் நகரில் பேருந்து நிலையம் போதிய அளவு பரப்பில் அமைந்துள்ளபோதும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. தினமும் 500-க்கும் மேற்பட்ட பேருந்து கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல் கின்றன.

ஆயிரக்கணக்கான பயணிகள் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். பயணிகள் காத்திருக்க போதுமான இருக்கைகள் பேருந்து நிலையத்தில் அமைக்கப்படவில்லை. குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. பயணிகள் காத்திருக்க அமைக்கப்பட்ட இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொண்டு பேருந்து நிலையத்தையே சுற்றி வரும் சிலர் பகலிலேயே இங்கு படுத்து உறங்குவதால் பயணிகள் நின்றுகொண்டே பேருந்துக்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. போலீஸார் எவ்வளவோ கட்டுப்படுத்தியும், பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை பேருந்துகளுக்கும், பயணிக ளுக்கும் இடையூறாக நிறுத்துவது தொடர்கிறது.

இரவில் பயணிகளிடம் சிறு சிறு திருட்டுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. பேருந்து நிலைய பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டும் திருட்டுக்களை கண்டுபிடிக்க முடிவதில்லை. புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டால்தான் இதுபோன்ற திருட்டு களை தடுக்க முடியும்.

இதற்காக போலீஸார் சந்தேக நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை போலீஸாரும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகமும் முழுமையாக செய்துதர வேண்டும் என்பதே திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x