Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

வறட்சிக்கு பெயர் போன கமுதியில் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் இரண்டாம் போக நெல் சாகுபடி

கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் இரண்டாம் போகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள். (உள்படம்) விவசாயி அய்யாத்துரை.

ராமநாதபுரம்

வறட்சிக்கு பெயர் போன கமுதி வட்டாரத் தில் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் 2-ம் போகமாக நெல் சாகுபடி செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு பருவமழையும், பருவம் தவறி நெல் அறுவடைக் காலமான ஜனவரியிலும் அதிக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள கண்மாய், ஊருணிகள் நிரம்பின.

மாவட்டத்தில் மழையால் பாதிக் கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் இரண்டாம் போகமாக நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட அறிவுரை வழங்கினார். அதனடிப் படையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் நெல், பருத்தியை சாகுபடி செய்துள்ளனர்.

குறிப்பாக கமுதி அருகே பசும்பொன் னில் கண்மாய் நிரம்பி உள்ளதால் மானாவாரியாக நெல் விதைத்துள்ளனர். அவை வளர்ந்து தற்போது கிராமமே பசுமை போர்த்தியபடி நெல் பயிர்கள் உள்ளன. இக்கிராமத்தில் மட்டும் கோடை விவசாயமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஏக்கரில் 2-ம் போகமாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதற்கு கண்மாய் தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.

தரைக்குடி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கமுதி பகுதியில் மட்டும் 100 ஏக்கரில் 2-ம்போகம் நெல் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து பசும்பொன்னைச் சேர்ந்த விவசாயி அய்யாத்துரை கூறியதாவது: கமுதி பகுதியில் இந் தாண்டு 2-ம் போகமாக நெல் சாகுபடி செய்துள்ளோம். கண்மாய் குடிமராமத்து பணி செய்ததாலும், மழை அதிகம் பெய்ததாலும் கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கோடை விவசாயம் நடைபெறு கிறது என்றார்.

கமுதி வேளாண்மை உதவி இயக்குநர் கிர்ஷோன் தங்கராஜிடம் கேட்டபோது, கமுதி வட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் 25,000 ஏக்கர் நெல் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. 2-ம் போகமாக இப்பகுதியில் குறுகிய கால நெல் வகைகளான கோ-51, குழிபறிச்சான் பயிரிடப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு ஓரளவு வருமானத்தை தரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x