Published : 10 Apr 2021 09:14 PM
Last Updated : 10 Apr 2021 09:14 PM

பண்ருட்டி அதிமுக பெண் எம்எல்ஏ, கணவர் உட்பட 6 நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

கோப்புப் படம்.

சென்னை

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் எதிர் கோஷ்டியாகச் செயல்பட்டதால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பண்ருட்டி பெண் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் உட்பட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 நிர்வாகிகளை நீக்கி ஓபிஎஸ்-இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்திற்கு இந்த முறை சீட் வழங்கவில்லை. தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்ததால், அவருக்கு எதிர் கோஷ்டியான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான அருண்மொழித்தேவனுடன் இணைந்து செயல்பட்டார்.

இந்த நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிமுக தலைமையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பளிக்காமல் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர் சம்பத்துடன் மோதியதாலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கட்சியின் மீது அதிருப்தி கொண்டு அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சத்யா பன்னீர்செலவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

ஆனால், அதிமுக தலைமை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்த நிலையில், இன்று எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேரை நீக்கி அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டது, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றிய காரணத்தால்

மாநில மகளிர் அணி துணைச் செயலாளர், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ,

பண்ருட்டி நகர மன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம்,

பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.பெருமாள்,

அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ்,

நெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் சவுந்தர்,

வீரப்பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராம்குமார்

ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு ஓபிஎஸ் - இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x