Published : 10 Apr 2021 04:08 PM
Last Updated : 10 Apr 2021 04:08 PM
மத்திய அரசு பிறப்பித்துள்ள 9 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைக்கும் அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், சென்னையில் வாஜ்பாய் அரசால் திறக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமையகம் தொடர்ந்து இயங்கிட அனுமதிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
“இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (Intellectural Property Appeals Board - IPAB) தலைமையகம் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 15இல் சென்னையில் அமைக்கப்பட்டது. அப்போதைய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனின் முயற்சியால் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒப்புதலுடன் ஐ.பி.ஏ.பி. தலைமையகம் சென்னையில் திறக்கப்பட்டது.
வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் பணியை ‘அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்’ மேற்கொண்டு வருகிறது. இதனை வேறு மாநிலத்திற்கு மாற்றும் முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் வந்தபோது நான் மாநிலங்களவையில் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினேன். அதற்கு பிப்ரவரி 4, 2020இல் பதில் அளித்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “ ஐ.பி.ஏ.பி. தலைமையிடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் இந்தியத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்பட 9 முக்கியத் தீர்ப்பாயங்களை அவசர சட்டத்தின் மூலமாகக் கலைத்துவிட்ட மத்திய பாஜக அரசு, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது.
வணிகச் சின்னம், காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு மற்றும் உரிமை மீறல் போன்ற அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வழக்குகளை நீதித்துறை உறுப்பினர்களுடன் தொழில்நுட்ப உறுப்பினர்களும் இணைந்து விசாரித்து தீர்ப்பளிப்பர் என்பதால் சர்வதேச அளவில் இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
இதைப் போன்றே சினிமாட்டோகிராப் சட்டம் 1952இன்படி அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், வருமான வரிச் சட்டம் 1961இன்படி அமைக்கப்பட்ட அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையகம், இந்திய விமான நிலைய ஆணையகச் சட்டம் 1994இன்படி அமைக்கப்பட்ட விமான நிலைய மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், தாவர வகை மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001இன்படி அமைக்கப்பட்ட தாவர வகைப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்பாயங்கள் தற்போது கலைக்கப்பட்டுள்ளன.
இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை இனி அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களே விசாரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் உயர் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளால் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய வழக்குகள் மேலும் பல ஆண்டுகளுக்கு விசாரணைக்காகக் காத்திருக்கும் அவலநிலை உருவாகும்.
எனவே, மத்திய அரசு பிறப்பித்துள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைக்கும் அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சென்னையில் வாஜ்பாய் அரசால் திறக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமையகம் தொடர்ந்து இயங்கிட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT