Published : 10 Apr 2021 10:23 AM
Last Updated : 10 Apr 2021 10:23 AM

செங்கல்பட்டு; வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காண்ப்பளர் சுந்தரவதனம்

செங்கல்பட்டு

வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சுந்தரவதனம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய தொகுதிகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் எண்ணப்படுகிறது. இந்த மையத்தின் பாதுகாப்பை சென்னை மாநகர போலீஸார் கவனித்து வருகின்றனர்.

அதேபோல் செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதிகள் தண்டரையில் உள்ள ஆசான் நினைவு பொறியியல் கல்லூரியிலும், இதே போல் மதுராந்தகம் அருகே நெல்வாய் கூட்டு சாலையில் உள்ள ஏசிடி பொறியியல் கல்லூரியில் செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியும், வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளேயும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ. சுந்தரவதனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் குறித்த விவரங்களும், அவர்கள் முறையான அனுமதி பெற்றுள்ளார்களா? என்பதை விசாரித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மத்திய ஆயுதப்படை தமிழ்நாடு காவல் துறை, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் நிலையத்திற்குள்ளே வரவும், வெளியே செல்லவும் உள்ள வழிகள் குறித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் காவல் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ. சுந்தரவதனம் கூறுகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு தொகுதிகள் இரண்டு இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த இரண்டு மையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பட்டாலியன் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை என மொத்தம் 228 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளியாட்கள் உள்ளே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மே 2ம் தேதி வரை இந்த பாதுகாப்புப் பணிகள் எந்த ஒரு தொய்வுமின்றி தொடரும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x