Published : 26 Dec 2015 02:41 PM
Last Updated : 26 Dec 2015 02:41 PM
பல ஆயிரம் உயிரை பலிகொண்ட சுனாமி நிகழ்ந்து 11 ஆண்டுகள் கடந்த பின்பும், கடலோர மீனவ மக்களிடையே கடல் பாதுகாப்பு குறித்த நம்பிக்கை பிறக்கவில்லை. இதுவரை தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு மையங்கள் அமைக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதே நாளில் 2004-ம் ஆண்டு சென்னை, குமரி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, கடலூர் பகுதியில் புரட்டிபோட்ட சுனாமியால் ஆயிரக்கணக்கான மக்கள் கடலலையில் சிக்கி பலியானார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை குளச்சல், கொட்டில்பாடு பகுதியில் அதிகமானார் உயிரிழந்தனர். கன்னியாகுமரி, மணக்குடி, அழிக்கால், சொத்தவிளை, பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.
சுனாமியால் பலியானோரின் நினைவாக கடற்கரையோர மாவட்டங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று சுனாமி நினைவு நாளில் இவற்றுக்கு ஆட்சியாளர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தவுள்ள வேளையில், இன்னும் சுனாமி பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகின்றன.
இப்போதும் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிவதும், உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேசிய பேரிடம் மேலாண்மை மீட்பு மையங்கள் அமைக்கப்படாததும் மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மையம் அமையவில்லை
தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு பொது செயலாளர் பாதிரியார் சர்ச்சில் கூறும்போது, `தமிழகத்தில் அதிக மீனவர்கள் உள்ள மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. சுனாமிக்கு பின்பு இங்கு இதுவரை தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு மையம் அமைக்கவில்லை. குளச்சல் அல்லது பிற பகுதிகளில் கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கான ஹெலிகாப்டர் மற்றும் மீட்பு கப்பல் அமைக்குமாறு சுனாமி நிகழ்ந்த நாளில் இருந்தே கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய அரசோ, மாநிலஅரசோ முயற்சிகளை எடுக்கவல்லை. முட்டம், ராஜாக்கமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்ட பேரிடர் பாதுகாப்பு மையம் செயல்படுவது குறித்து கூட பெரும்பாலான மீனவர்களுக்கு தெரியாது. கடமைக்காகவே அவை அமைக்கப்பட்டுள்ளன. கடல் நீரோட்டம், புயல், காற்று, மழை போன்றவற்றை கணிக்கமுடியாத நிலையில் சிரமப்படும் மீனவர்களுக்கு கடல் வாழ்வு நிரந்தரமானதல்ல. எனவே அவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தர வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
சீஸன் நேரங்களில் கிடைக்கும் உயர்வகை மீன்களும் சுனாமியால் கடலில் ஏற்பட்ட மாற்றத்துக்கு பின்பு கிடைப்பதில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். சுனாமி கற்றுத்தந்த பாடத்துக்கு பின்பும் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் பல மீனவ கிராமங்களில் இல்லை.
பேரிடர் நிகழ்ந்தால் மீனவர்கள் தங்குவதற்கு மாற்று இடம் இல்லை. தற்போது கடல் சீற்றத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளிகளிலும், உறவினர்கள் வீடுகளிலுமே தஞ்சம் அடைகின்றனர். இனியும், ஒரு சுனாமி வரவேண்டாம் என இந்நாளில் பிரார்த்திக்கிறோம்’ என்றார்.
கடற்கரைப் பகுதி அதிகமென்பதால் நாகை மாவட்டத்தில் பலியானோர் அதிகம்
நாகை மாவட்டம் பழையாறு முதல் கோடியக்கரை வரையிலான கடற்கரைப் பகுதியின் நீளம் 187 கிலோமீட்டர் தூரமாகும். கடற்கரையோரப் பகுதி இம்மாவட்டத்தில் அதிகம் என்பதால் நாகை மாவட்டத்தில் சுனாமியால் பலியானோரின் எண்ணிக்கையும் அதிகம். கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட வேளாங்கண்ணிக்கு ஏராளமானோர் வந்ததால் மாவட்டத்திலேயே ஒரே இடத்தில் அதிகமானோர் உயிரிழந்தது இங்குதான்.
நாகை மாவட்டத்தில் பலியானோர் 6,065 பேர். இவர்களில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4,231, வெளி மாவட்டத்தினர் 536, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் 240 பேர். இதில் பெரிய சோகம், தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் 243 பேர் என்பதுதான். பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 1,329 பேர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT