Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM
கரோனா தொற்றின் பரவல் மீண்டும்வேகமெடுத்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். திருப்பூர் போன்ற தொழில் நகரில் நாள்தோறும் ஏராளமானோர் ஒன்று கூடி வேலை செய்யும் இடத்தில் பரவல் வேகமாக இருக்கும் என்பதும்பலரின் அச்சத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கான உணவு உரிய தரத்துடன் வழங்கப்படாததால், பலரும் அருகில் உள்ள உணவகங்களை நாடும் நிலைக்கும்,வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
சமூக தொற்றாக மாறும்
இதுதொடர்பாக நோயாளிகள் சிலரிடம் பேசும்போது, "கரோனா தொற்றை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதேசமயம், சிகிச்சை மையங்களில் வழங்கப்படும் உணவு உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கரோனா வார்டில் போதிய அளவில் குடிநீர்கூட இல்லை. இதனால் நோயாளிகள் பலரும் வெளியே காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல, சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளிக்கு சமைக்கப்படும் உணவையே, கரோனா தொற்றாளர்களுக்கும் வழங்குகிறார்கள்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யேக உணவு வழங்கப்பட்டது.
தற்போது அந்த நடைமுறை இல்லை. இதனால் நோயாளிகள் பலரும் கரோனா வார்டில் இருந்து வெளியேறி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள உணவகங்களை நாடிச் செல்கின்றனர். இது பேராபத்தான விஷயம் என்பதைக்கூட பலர் அறியவில்லை. இவர்கள் மூலமாக அங்கிருப்பவர்களுக்கு பரவி, சமூகத் தொற்றாக மாறக்கூடிய நிலையில்தான் சூழல் உள்ளது.
சாப்பிட தயங்கும் குழந்தைகள்
காலையில் வழங்கப்படும் இட்லி போன்ற உணவுகள் காய்ந்து போயிருப்பதால் பலரும் வெளியே வாங்குகின்றனர். அதையும் மீறி சிலர் வீடுகளில் இருந்து கொண்டுவரும் உணவை உண்கின்றனர்.
இதனால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் கரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.மருத்துவமனையில் தரமான உணவு கிடைத்தால், வேறெங்கும்நோயாளிகள் சாப்பிட வேண்டிய நிலை வராது. மருத்துவமனைகளில் கிடைக்கும் உணவு பெரியவர்களே சாப்பிட முடியாத நிலை இருக்கும்போது, நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் எப்படி உட்கொள்வார்கள்? இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்" என்றனர்.
அனுமதி அளிக்கப்படவில்லை
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவர்கள் சிலர் கூறும்போது, "கரோனா தொற்று பாதிக்கப்பட்டு நாங்களும் சிகிச்சை பெற்றோம். வழங்கப்பட்ட உணவு தரம் இல்லாமல் இருந்ததால், உடனடியாக சக மருத்துவர்கள் தயவுடன் அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை உண்டோம். ஆனால், மற்ற நோயாளிகளின் நிலை கவலைக்கிடமான ஒன்றுதான். சிகிச்சை அளித்தாலும், உணவிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமான ஒன்று. கடந்த முறைபோல இந்த முறையும் தொற்றாளர்களுக்கு பிரத்யேக உணவு வழங்க அனுமதி அளிக்கப்படவில்லை" என்றனர்.
நிதி வேண்டும்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறும்போது,
‘‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் தயாரிக்கப்படும் உணவை தனியாக பேக் செய்து வழங்குகிறோம். விரும்பியவர்கள் உண்பார்கள். மற்றவர்கள் வீட்டில் இருந்து கொண்டுவரப்படும் உணவை உண்பார்கள். பிரத்யேக உணவு விஷயங்களுக்கான நிதியை, மாவட்ட நிர்வாகம்தான் அரசிடம் கேட்டு பெற்றுத்தர வேண்டும்" என்றார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் கரோனா வார்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT