Last Updated : 04 Dec, 2015 09:49 AM

 

Published : 04 Dec 2015 09:49 AM
Last Updated : 04 Dec 2015 09:49 AM

சுனாமியை நினைவூட்டிய வெள்ள பாதிப்புகள்: டிவி நிருபர்களின் நேரடி அனுபவங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து நேரடியாக மக்களுக்கு செய்திகளை வழங்கிய டிவி நிருபர்கள் சிலரின் அனுபவங்கள்:

கே.ஜெயசங்கர் (சன் டிவி):

தாம்பரத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை நேராக பார்த்து அதிலிருந்து விடுபட முடியாமல் உள்ளேன். தில்லை கங்கா நகர் சுரங்கப் பாதையில் தவறி விழுந்த முதியவர் உட்பட பல மரணங்கள் என் கண் முன்னே நிகழ்ந்தன. இப்போதும், முடிச்சூர், லட்சுமி நகர் மற்றும் பார்வதி நகரில் பலர் இறந்துள்ளதாக கூறப்படு கிறது. அவர்களது உடல்கள் கிடைக் குமா என்பது கூடத் தெரியாமல்தான் அவர்களது உறவினர்கள் உள்ளனர். இவையெல்லாம் என் மனதை கடுமையாக பாதித்துள்ளன.

புவனேஸ்வரி (ராஜ் டிவி):

அடையாற்று நீர் சைதாப்பேட்டை பாலத்தை படிப்படியாக கடந்ததை நேரடியாக பார்த்தேன் அது சுனா மியை நினைவூட்டியது. அங்கிருந்த பெண்மணி ஒருவர், ‘பேப்பர்க்கார வங்களா நீங்க’ என்று கேட்டு, இயற்கை உபாதையை கழிக்க ஏதாவது உதவ வேண்டும் என்றார். என்னால் அவருக்கு உதவ இயல வில்லை. இது எனக்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜோ.பிரசாத் (நியூஸ் 7):

கோட்டூர் புரம் பகுதியில் கடந்த 2-ம் தேதி செய்தி சேகரித்துக் கொண்டிருந் தேன். அடையாற்றில் தண்ணீர் பேரி ரைச்சலுடன் சென்றுகொண்டிருந் தது. கோட்டூர்புரம் பாலத்தில் ஏற்பட்ட அதிர்வு வெள்ளத்தின் வேகத்தை உணர்த்தியது. காந்தி மண்டபத்திலிருந்து அந்த இடத் துக்கு வந்திருந்த மான்கள் கூட அந்த வெள்ளத்தில் சிக்கின. கோட்டூர் புரத்தில் 10 ஆயிரம் பேர் வெள் ளத்தில் சிக்கினர். இதுபற்றி சமூக நலத்துறை அமைச்சரிடம் கேட்க சென்ற போது, அவர் பதில் ஏதும் சொல்லாமல் நழுவிச் சென்று விட்டார். ஒரு மக்கள் பிரதிநிதி இப்படி நடந்துகொண்டது என் மனதை மிகவும் பாதித்தது.

சாரதா (நியூஸ் 7):

தாம்பரம் பகுதியில்தான் வெள்ளம் அதிகம் என்று கருதி நான் அங்கு செல்ல முயன்றேன். ஆனால், என்னால் தி.நகரை கடக்க முடியவில்லை. விசாரித்தபோது, மேற்கு மாம்பலத் தில் நெஞ்சளவு தண்ணீர் செல் வதாகக் கூறினார்கள். உடனடியாக வீடியோ குழுவினருடன் அங்கு சென்றோம். அங்கே மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்தபோது நெஞ்சம் பதறியது.

லேக் வியூ சாலை அருகே நின் றிருந்த வினோத் எனும் இளைஞர், ‘‘என் அம்மா, தங்கை, அவள் குழந்தை ஆகியோர் இப்பகுதியில் சிக்கியிருக்கிறார்கள். அவர் களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஏதா வது உதவி செய்யுங்கள்” என்றார். அவரைப் போன்று பலரும் தங்கள் உறவினர்களை நினைத்து கதறிக்கொண்டிருப்பதைப் பார்க் கும்போது கண்கள் கலங்கின.

கார்த்திக் (பாலிமர் டிவி):

நான் முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக செய்தி சேகரித்து வருகிறேன். முடிச்சூர் பெருங்களத்தூர் மதுரவாயல் சாலை அருகே உள்ள 5 ஆயிரம் வீடுகள் கடலுக்குள் இருப்பது போல் காட்சியளிக்கின்றன. இந்தப் பகுதிகளில் படகில் சென்றுதான் செய்தி சேகரிக்கிறோம். செய்தி சேகரித்து திரும்பும் போது, பொதுமக்கள் தங்களையும் படகில் ஏற்றிச் சென்று மேடான பகுதிகளில் விடச்சொல்லி கெஞ்சுகின்றனர். அவர்களில் பலருக்கு நாங்கள் உதவினோம். லட்சுமி நகர் அருகே ஒரு கர்ப்பிணி வெள்ளத்தில் சிக்கியிருந்ததைக் கண்டு மிகவும் வருந்தினேன். அவருக்கு நாங்கள் உதவியது என் மனதுக்கு திருப்தி அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x