Last Updated : 09 Apr, 2021 06:23 PM

 

Published : 09 Apr 2021 06:23 PM
Last Updated : 09 Apr 2021 06:23 PM

தூத்துக்குடி தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து; ரூ.20 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பொருட்கள் சேதம்

தூத்துக்குடி தனியார் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர். | படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தனியார் குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி - மதுரை புறவழிச் சாலையில் சிப்காட் வளாகத்தில் சிகால் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்துக்குச் சொந்தமான குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் இருந்து பொருள்கள் சரக்குப் பெட்டகங்களில் ஏற்றப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.

அதன்படி, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏற்றுமதிக்காக 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஜவுளிகள், ரெடிமேட் ஆடைகள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள், பேப்பர் பண்டல்கள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொண்டு வரப்பட்டு சுமார் 200 மீட்டர் நீளமுள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று (ஏப்.09) பிற்பகல் 2 மணி அளவில் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென குடோன் முழுவதும் வேகமாகப் பரவியது.

இதுகுறித்து, தகவலறிந்த தீயணைப்புத் துறை துணை இயக்குநர் விஜயகுமார், தூத்துக்குடி மாவட்டத் தீயணைப்பு அலுவலர் குமார் ஆகியோர் தலைமையில், தூத்துக்குடி, தெர்மல் நகர், சிப்காட், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதேபோன்று, 4 தனியார் நிறுவனங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுத் தீயணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஜவுளிகள், ஆயத்த ஆடைகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், பேப்பர் பண்டல்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருப்பதாக ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்கள் குடோனில் இருந்ததால், அந்த நிறுவனங்களிடம் இருந்து பொருட்களின் மதிப்பு கிடைத்தால்தான் சரியான சேத மதிப்பு தெரியவரும். அந்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குடோன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், சிப்காட் காவல் ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது தொடர்பாக, சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x