Published : 09 Apr 2021 04:13 PM
Last Updated : 09 Apr 2021 04:13 PM

கரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளை நீக்கி மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை பொதுமக்கள் கடைபிடித்து கரோனா தொற்றை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும், அதையும் மீறி நடந்தால் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழ்நாட்டை பொறுத்தவரை கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று விகிதம் (Positivity Rate) மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது. தற்போது ஏப்ரல் 2021-இல் சராசரியாக தினமும் 3900 அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, நோய் உறுதி செய்யப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், கோவிட் கவனிப்பு மையங்களில் அனுமதிக்கவும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவிட் சார்ந்த பழக்கங்களான (COVID Appropriate Behaviour) முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவைகளை மீண்டும் கடைபிடிக்க வலியுறுத்தப்படுவதோடு, இதனை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 16.3.2021 முதல் இதுவரை, விதிகளை மீறியதாக 1,36,667 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து 2,88,90,600 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, நோய் தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்டுபிடித்து பரிசோதனை செய்தல், நோய்த் தொற்றுப் பகுதிகளில் கண்டிப்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்தல், நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தொடக்க நிலையிலிருந்த கவனம் செலுத்தல் மற்றும் தமிழ்நாடு மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் பிசிஆர் பரிசோதனையை செய்து வருகிறது.

இதுவரை 2.01 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன, மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று கண்காணித்தல், நடமாடும் காய்ச்சல் முகாம்கள் (Field Fever Camps) உட்பட தினமும் 3000 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், வீட்டில் தனிமைப்படுத்தும் முறை போன்ற கோவிட் சார்ந்த பழக்கங்கள் (COVID Appropriate Behaviour) பற்றி தீவிரமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அரசு எடுத்து வரும் மேற்கண்ட நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது தமிழ்நாட்டில் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர் என்பதோடு, இறப்பு விகிதம் 1.41 விழுக்காடு என குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் தமிழ்நாடு அரசு, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 30 நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 10 (நாளை) முதல் முற்றிலுமாக தடைவிதித்தும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கரோனா ஊரடங்கு (Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும். தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த கரோனா தொற்று இரண்டாவது அலையை சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x