Published : 09 Apr 2021 03:58 PM
Last Updated : 09 Apr 2021 03:58 PM

நீலகிரியில் கோவிட் கேர் மையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கோவிட் கேர் மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவல் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (ஏப். 09) மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி மற்றும் அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு கட்டுபாட்டுகளை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாதம் தினமும் 5-10 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதனால், நோய் பாதிப்பு பகுதிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இப்பகுதிகளிலிருந்து யாரும் வெளியில் நடமாட கூடாது.

நீலகிரி மாவட்டத்தில் கெட்டிகெம்பை, கேர்கெம்பை, புதுமந்து, எட்டினஸ் சாலை, கோடேரி எம்.டி.நகர் மற்றும் பாடந்தொரை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் 115 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, கோவிட் கேர் மையங்கள் செயல்பாடு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இளைஞர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் மையத்தில் 20 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் கோவிட் மையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

மாவட்டத்தில் 82 ஆயிரத்து 180 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போடுவார்கள்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகளில் 23 ஆயிரத்து 483 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 96 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்துக்குள் வர தொடர்ந்து இ-பதிவு செய்து வர வேண்டும். அவர்கள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் அவர்களுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

பேருந்துகளில் குறிப்பிட்ட அளவு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்ச்சிகள் நடத்த கோட்டாட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

வழிபாட்டு தலங்களில் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதர்களிடமிருந்து ரூ.49 லட்சத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x